உயிரற்ற உடல் நீ

By Guru Prasath

29.9.14 அன்று எங்கள் நண்பன் முருகானந்தம் இறந்த போது எனது பேனாவில் வழிந்த கண்ணீர் கவிதையாக….

உயிரற்ற உடல் நீ
உயிருள்ள பிணம் நாங்கள்.

மரணத்திற்கு உன் உடல்
சமைக்கப்பட்ட பொழுதிலிருந்து
உயிர்ப்பூ இரண்டும்
வற்றா உப்புக் குளங்கள்.

பதினெட்டு வயதில்
பரமனைச் சேர்ந்தாயே
பாவிகள் நாங்கள் ஏதும்
பிழை செய்தோமோ?

விதியின் சதி
உன் மரணம்.

இதோ இப்பொழுது
வானம் அழுகிறது
உன் பாதம் பதிந்த
பாதைகளை நனைத்து.

மூன்று நாட்கள்
முழுதும் மரணத்தோடொரு
துவந்த யுத்தம்
முடிவில் மரணம் ஜெயித்ததோ?
மனிதம் தோற்றதோ?

நிராயுதபாணியாய் நின்ற
உன் மீது ஏவுகணை வீச
எவன் அனுமதித்தானோ
அவன் ஆண்டவன் இல்லை
அரக்கன் ஆவான்

ஐந்து நாட்கள் முன்பு வரை
உதட்டில் சிரிப்புடன்
உலாவிய நீ இன்று
அரை கிலோ சாம்பலாய் ஆன
சங்கதி என்ன?

பத்து மாத பந்தத்தில்
நாம் பேசிய வார்த்தைகள்
இன்று
காற்றில் உலவுகிற
முகாரி ராகங்கள்.

உன் கனவுகள் பற்றி
நாம் சிலாகித்து பேசிய
செய்திகள் எல்லாம்
காற்று கரைத்து
காலம் களவுண்டதே.

மரணத்தின் வாயிலில் நின்றழுது
மருத்துவமனையின் கதவுகள் தட்டினாய்
சாவின் சன்னல்களும் சேர்ந்தே திறந்தன.

உன் மரணம் எனக்கு போதித்த
இரண்டு உண்மைகள்
காலனை வென்ற மனிதர்கள் இல்லை
காலம் கொண்டாலும் பலர் மறைவதில்லை.

பட்டிக்காட்டில் இருந்து பாடம் படிப்பதற்கு
பட்டணம் வந்தாயே
படிப்பு முடிவதற்குள்
செத்து வெந்தாயே.

படிப்பு முடித்து பெயருக்குப்பின் பட்டம் பெறா விட்டாலும்
இறந்து பெற்றாய் பெயருக்கு முன் அமரர் பட்டம்.

மார்கண்டேயனுக்கு செவிமடுத்த சிவன் இன்று
உன் மரணப்புலம்பலுக்கு செவிடனாய் அனானே.

உடலால் மறைந்தாலும்
நினைவால் அழியவில்லை
என்ற பொய் அலங்காரங்களுக்கு
இக்கவிதையில் இடமில்லை.

இந்த கையறுநிலைக்கு
காலம் பதில் கூறும்
அந்தக் காலனுக்கு பயந்தே எங்கள்
வாழ்வும் கரைந்தோடும்.

 

friend

Each and every MITIAN is saddened by the death of our dear friend Muruganantham, 2nd year PT, MIT. The MIT Quill expresses its deepest condolences.

By Guru Prasath

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *