இதுவும் ஓர் கடமையே

By சுதர்ஷன்  சுந்தரவரதன் (2011502050)

2012  ஆம்  ஆண்டில்  ரயில்  விபத்துகள்  பற்றி  ஓர்  கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. அதன்படி  வருடத்திற்கு  சுமார் 15000 பேர் ரயில்  விபத்துகளால் இறக்கின்றனர். இதற்கு  முக்கியமான  காரணங்கள்  இரண்டு.  ஒன்று :  கூட்டம்  அதிகமாக  உள்ள ரயில்களில்  தொற்றிக்  கொண்டு போவது. மற்றொன்று :  படிகளைப் பயன்படுத்தாது  தண்டவாளங்களைக்  கடப்பது .  இவை இரண்டுக்கும் பொதுவான  காரணம்  ஒன்று உண்டு. அது  மக்களின்  அலட்சியம்  ஆகும்.

நமது  கல்லூரி மாணவர்களை  எடுத்துக்கொள்வோம். தினமும் காலை 8.15 முதல் 8.30 மணியளவில் குரோம்பேட்டை  ரயில் நிலையத்தில் பலர்  தண்டவாளங்களைக்  கடப்பதை நாம்  காணலாம். அவர்களுள்  90 சதவீதத்தினர்  நம்  கல்லூரி  நண்பர்கர்களே  ஆவர். இவ்வாறு  படிகளைப் பயன்படுத்தாது  ஏன்  தண்டவாளங்களைக்  கடந்து  செல்கின்றார்கள்  என்று கேட்டால்  ” க்ளாஸ்க்கு  லேட்டா  போனா  அட்டெண்டென்ஸ்  கிடைக்காது ” என்று  கூறுவார்கள்.  படிகளைத்  தவிர்ப்பதால்   அவர்கள்  எவ்வளவு  நேரம் தினமும்  சேமிக்கிறார்கள் என்று  எனக்குத் தெரியவில்லை.  சரியாக  நேரத்தைக் கடைபிடிக்காது மேலும்  விதிகளையே  மீறி  வருகின்றனர்.  தண்டவாளங்களைக் கடப்பது  இந்திய  ரயில்வே சட்டத்தின்படி  ஓர்  குற்றம்  என்பது  பலருக்கு தெரியுமா  என்றும்  எனக்குத் தெரியவில்லை. ஆகவே இவ்விடத்தில் அதை எடுத்துரைக்கின்றேன்.  தண்டவாளங்களைக்  கடந்தால் குறைந்தபட்சம்  ஆறு  மாத சிறை தண்டனை அல்லது 1000 ரூபாய்  அபராதம்  என்பதே  அந்த  சட்டமாகும்.

fort-crossing

இவ்விடத்தில்  மேலும்  ஒன்றை  நான்  எடுத்துரைக்க நினைக்கின்றேன் .  மன்னியுங்கள் .  எனக்கு தெரிந்தே  நம்  கல்லூரி மாணவர்கள்  இரண்டு  பேர்  ரயில் விபத்துகளால் இறந்துள்ளனர் . சுமார்  நான்கு மாதங்களுக்கு முன்னால் பல்லாவரம்  ரயில்  நிலையத்தில்  தண்டவாளம்  கடக்க  முயன்ற  போது  ஒருவர்  ரயில் மோதி  இறந்ததை  நேரில்  கண்ட  பிறகே  நான்  இங்கு என் எண்ணங்களைப்  பதிவு  செய்கின்றேன். அந்தச் சம்பவத்தைக்  கண்ட பிறகு என்  நண்பர்கள்  சிலரிடம் அதைப்  பற்றிக் கூறி  அவர்களைத்  தண்டவாளங்களைக்  கடப்பதைத் தவிர்க்கச் சொல்லி வலியுறித்தினேன்

நாம்  அனைவரும்  அரசாங்கத்தில்  பல குறைகளைக்  கண்டுபிடித்து அவற்றைப்  பற்றி  விவாதித்துக் கொண்டு இருப்போம். ஆனால் அரசாங்க  விதிகள்  அனைத்தையும்  நாம்  கடைப்பிடிகின்றோமா என்று சற்று சிந்தித்துப்  பார்ப்போம். அந்நியன், சிவாஜி  போன்ற  திரைப்படங்களில் சமுதாயம் சம்மந்தமாக எடுக்கப்படும் காட்சிகளைப் பற்றி  நாம்  பல மணி நேரம் பேசிக்கொண்டிருப்போம். ஆனால்  அவை  நம்  நினைவுகளில் சில நாட்களே நிலைத்து நிற்கின்றன.  ஃபேஸ்புக்,ட்விட்டர்  போன்ற சமுதாய  வலைதளங்களில் பல சம்பவங்களைப் பற்றி விவாதித்துப் பல செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.ஆனால் தினசரி  நாம்  பல  விதிகளை  மீறி  வருகின்றோம் என்பதை நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நம்முள் பலர்  ஏற்கனவே ஓட்டு உரிமையைப் பெற்றுள்ளோம். இன்னும் ஓரிரு ஆண்டுகளில்  வேலைக்குச் செல்லத்  தொடங்கி அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் குடிமக்களாக நாம் இருப்போம். நம்  நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள்  கையில்  என்று  பலர்  கூறுகின்றனர்.  ஆனால் அத்தகைய  நாம், மற்றவர்க்கு  நல்ல  உதாரணமாக  செயல்படாது ,  இவ்வாறு விதிகளை மீறுவது வருத்தத்திற்குரிய  ஒன்றாகும்.

railway-trespassing

இவை  அனைத்தையும்  நாம்  நன்கு  சிந்தித்து,  விதிகளைப் பின்பற்றுவோம். இதைப் படிக்கும் தோழர்களுக்கும் தோழிகளுக்கும் ஓர் வேண்டுகோள் .நம்மால்  இயன்ற  வரையில் விதிகளைப் பின்பற்றி,  பிறர்க்கு  நல்லதோர்  உதாரணமாக  செயல்பட  வேண்டும்  என்பதை  ஓர்  கடமையாகக்  கொள்வோமாக!!!.

By சுதர்ஷன்  சுந்தரவரதன் (2011502050)

One thought on “இதுவும் ஓர் கடமையே

  • Wonderfully written truth. Challenge is are we willing to follow even when others ridicle. Many give up adhering to rules when that happens.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *