நினைவுகளின் பக்கங்கள்

பிடித்தும் பிடிக்காமலும் புரட்டப்படும் சில புத்தகங்களின் பக்கங்களென சரிந்தோடுகின்றன இக்கல்லூரி நாட்கள்.
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கமும்
ஒரு புதிய அத்தியாயத்தின் பிறப்பிடம் ஆகின்றன.

இங்கே எழுதப்படும் கதைகளும் தீட்டப்படும் ஓவியமும்
கற்பனையோ கனவின் நிழலுருவமோ அல்ல
யதார்த்தங்களின் கலவை.

வண்ண ஓவியமாக்க நினைத்து கருமை மட்டுமே படர
கருப்பு வெள்ளையில் மிளிரும் பக்கங்களும் ஏராளம்.
எழுத மனம் வராமல் முதல் சில வரிகளிலே
பேனா முனை முறிக்கப்பட்டு
வறண்டு போய் வெளிரிப்போன பல வெள்ளைப்பக்கங்களும் இங்கே உண்டு.

முடிவைத் தேடியோடிய அவசரத்தில் கிறுக்கல்களாகிய பக்கங்களும் உண்டு.
எளிதில் முடிவு காண விரும்பாமல் ஒவ்வொரு எழுத்தாய் செதுக்கப்பட்ட பக்கங்களும் உண்டு.
பலவேறு கதாப்பாத்திரங்கள் அலங்கரிக்கும் பக்கங்களும் இங்கே உண்டு.
கதாப்பாத்திரங்களே இல்லாமல் தனிமையில்  உரையாடும் பக்கங்களும் நிறைய உண்டு.

புதிதாய் பிறப்பெடுக்கும் அத்தியாயங்களுள் பழைய அத்தியாயத்திற்கு முடிவுகாண விழையாது
ஒரே கதையை ஓரே சித்திரத்தைப் பல வண்ணங்களில் கூறிமுடிக்கும் புத்தகங்களும் நிறைய உண்டு.

முடிவு வராதா?  என்ற ஏக்கம் விழைக்கும் கதாப்பாத்திரங்களுக்கு மத்தியில் பக்கங்களின் முடிவில் பிரிய வேண்டுமே என்ற அச்சத்தில் பேனா மை தீர்ந்து போனதென பொய் சொல்லித் தன்னோடு குலாவிநிற்கச் செய்த நிகழ்வுகளைத் தாங்கிய பக்கங்களும் ஏராளம் தான்.

அனைவரையும் பம்மி நடக்கச்செய்யும் அட்மின் பிளாக்,
மூலைக்கொன்றாக சிதறி நின்று எப்போதாவாது நாம் எட்டிப்பார்க்கும் டிப்பார்ட்மண்ட்,
வருடத்திற்கு இருமுறை குழந்தைகள் விளையாடி மகிழும் ஹாங்கர்,
பரிட்சைத்தாளில் எழுதுவதோடு மட்டுமல்லாமல்  மூன்றுமணி நேரம் தொடர்ந்து தன் க்ரஷ் ஐ சைட் அடித்துத் தூங்கும் ஹாங்கர் 2,
முதல் வருடத்தோடு தொடர்பு முடிந்து போன Rlhc,
மூன்றாண்டு தொடர்ந்து ஏறி இறங்கிய Lhc படிகள்,
வொர்க்சாப்,
எதுக்குனே தெரியாத பெபல்ஸ் டிராக்,
10:10 க்கு பப்ஸுக்காக அடிச்சிக்குற ஹாஸ்டல் ஸ்டோர்,
வருடத்துக்கு ஒன்னா தங்கிப்பாத்த ஹாஸ்டல் பிளாக்,
அட்மிஸனுக்கப்புறம் எட்டிப்பாக்காத ஹாஸ்டல் ஆபீஸ்,
தீர்த்தம் கொடுக்கிற பழைய வெஜ் மெஸ் டாங்க்,
குரூப்  ஸ்டெடினு கடல போடற பி.டி.ஏ,
பேர் போன Lhc 3rd floor,
கூட்டம் சேக்கமுடியாத இராஜம் ஹால்,
டேன்ஸு வெரைட்டினு எப்பயுமே  சந்தோஷமா இருக்குற ஓ.ஏ.டி,
700 மீட்டர் மட்டுமே இருந்தாலும் பலரோட கனவின் தொடக்கமான எம்.ஐ.டி சாலை,
வருடா வருடம் கணக்கில்லாம ஆரம்பிக்கப்படும்  வாட்ஸப் குரூப்,
அரட்ட அடிக்குற வைப்பை ஹட்,
காதலர்க்கு அடைக்கலம் தர்ர ஜி.ஜே பார்க் என
கதைகளும் ஓவியமும் படர்ந்து செல்லும் களங்கள் ஏராளம்…

மச்சான்,மாமே,
மச்சி,பங்கு,
பங்காளி,
அண்ணா,அக்கா,தம்பி,தங்கச்சி,
காதலன்,காதலி,தோழன்,தோழி,  எஃ.ஏ,கைடு,சேர்மேன், எல்லாத்துக்கும் மேல சீனியர் ஜீனியர்னு
இங்கே கதையை நடத்தும் கதாப்பாத்திரங்கள் ஏராளம் .
அச்சில் வராவிட்டாலும் அழிவில்லா புத்தகங்கள் இவை.

மொத்தத்தில் எம்.ஐ.டி அழிவில்லா பல கதைகளும் ஓவியங்களும்
தீட்டப்படும் ஓய்வில்லாப் பட்டறை!

-இல. ம. ரா

எழுதியவர்: இல.மணிராஜ், மூன்றாம் ஆண்டு, மயமாக்கல் பொறியியல்.

Photographed by: Dhanvanth Raman, Final Year, Automoblie Department and Varunesh R S, Second Year, Department of Electronics.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *