வேரைக் கிளப்பிய வேர்கிளம்பி

ஒரு அழகான மாவட்டம். எங்கே பார்த்தாலும் பசுமை. அங்கே வெயில் என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வூரை ஆதவன் ஆளவில்லை. இடி,மின்னல்,மழை ஆட்சி செய்யும் மகத்தான அரசாங்கம். வறண்ட பூமி என்றால் என்னவென்றே தெரியாத மக்கள் வாழும் ஒரு சொர்க்கம்.
                மேகம் தவழம் உயரமான மலைச்சாரல்கள், நெல்மணிகள் எடையினால் தலைசாய்ந்து நிற்கும் கதிர்கள், என்றென்றும் பச்சையாகவே இருக்கும் வயல்வெளிகள், காற்றின் இசைக்கேற்ப ஆடும் வண்ண நிறப்பூக்கள், வளைந்து நெளிந்து ஓடும் ஆறுகள், வானைத்தொடும் தென்னை மரத்தோப்புகள், கானம் பாடும் பறவைகள், ஏரி போல் பெரிதாக வெட்டப்பட்டிருக்கும் குளங்கள், மூலிகைகளை அள்ளி வரும் அருவிகள், கடற்குச்சிகளையும், சிப்பிகளையும் அள்ளித் தரும் பாறைகளால் அலங்கரிக்கப்பட்ட கடற்கரைகள், ஞாயிறு இருந்தும் வெயிலைத் தடுக்கும் சில்லென்ற குளிர்ந்த காற்று, எப்பொழுதும் மனதைக் குளிர வைக்கும் அடைமழை, முதலைகள் வாழும் நீர்நிலைகள், பல நூற்றாண்டுகளாக உயர்ந்து நிற்க்கும் யானை பலம் கொண்ட பெரிய மரங்களும் கொடிய வனவிலங்குகளும் உலவும் காடுகள், கற்களால் பலப்படுத்தப்பட்ட கோட்டைகள், அழகிய அரண்மனைகள். இவ்வளவு விலை உயர்ந்த ஆபரணங்களால் தன்னை அழுபடுத்தி தேவதையாய் இருப்பவள் தான் கன்னியாகுமரி மாவட்டம். என்னே அழகு! இவ்வளவு அழகு கொண்டிருப்பவள் அழகி அல்ல பேரழகி.
WP_20140521_029
           அந்த அழகான ஊரில் மழைக்காலம் தொடங்க சில வாரங்களே இருந்தது. சில மாதங்களாக மலைகளில் வேலை செய்தவர்கள் வீட்டிற்க்குச் செல்லும் காலம் வந்தது. கூட்டம் கூட்டமாக மக்கள் மலைகளிலிருந்து வந்து கொண்டிருந்தனர். உணவு  உண்டுவிட்டு பயணத்தைத் தொடரலாம் என்று எண்ணினர். சமைப்பதற்கேற்ற இடத்தைத் தேடினர்.
           அப்பொழுது ஒரு பழங்காலத்து பெரிய மரத்தைக் கண்டனர். அதன் வேர்கள் ஒவ்வொன்றும் ஒரு மனிதன் அளவுக்குத் தடித்து நீளமாக இருந்தன. அடுப்பாக மாற்ற ஏற்ற வேர்கள். எனவே அவர்கள் இரு பெரிய வேர்களுக்கு இடையே நெருப்பை மூட்டி அதன் மேலே பாத்திரங்களை வைத்தனர். திடீரென்று ஒரு சலசலப்பு. ஏதோ ஒன்று அசையும் சத்தம்.
WP_20140521_036
           என்னவென்று பார்த்தால் சூட்டைத் தாங்காமல் ஒரு வேர் அங்கிருந்து கிளம்பி விட்டது. இதைக் கண்ட அவர்கள் ஆச்சரியமடைந்தனர். பார்த்துக்கொண்டு இருந்த அவர்கள் பீதியில் உறைந்தனர். காரணம், அது வேர் அல்ல, அவர்கள் வாழ்க்கையிலே கண்டிராத அளவுக்குப் பெரிய மலைப்பாம்பு. தப்பிப் பிழைத்தாலே போதும் என்று அந்த மக்கள் அலறிக் கொண்டு ஓடினர். அன்று முதல் அந்த இடத்துக்கு ‘வேர்கிளம்பி’ என்ற வித்தியாசமான பெயர் வந்தது. சில நூற்றாண்டுகளான பின்னரும் இச்சம்பவம் வாய்வழிச் செய்தியாக அடுத்த தலைமுறையின் செவிகளில் விழுகிறது.

 

 

2 thoughts on “வேரைக் கிளப்பிய வேர்கிளம்பி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *