எம்.ஐ.டியில் வீசும் காற்றோடு, தமிழரின் கலாச்சாரப் பண்பின் மணம் வீசச் செய்யும் எம் ஐ டி தமிழ் மன்றம், இவ்வாண்டின் செயல்பாடுகளுக்கு 25/09/2018 புரட்டாசி மாதம் ஒன்பதாம் நாள் அன்று தொடக்க விழா நடத்தியது. மன்றத்தின் முதற்கண் தெய்வமான தமிழ்த்தாயை வாழ்த்தி நிகழ்ச்சி தொடங்கியது.
சென்னைப் பல்கலைக்கழக அழிநிலை மொழித்துறை இணை பேராசிரியரும், துறைத்தலைவருமான முனைவர் கோ.பழனி அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்து விழாவினை சிறப்பித்தார். மன்றத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் வெற்றிச் சுடர் காண ஓர் நற்றொடக்கத்தின் அடையாளமாக, மேடையில் இருந்த சான்றோரால் குத்துவிளக்கு ஏற்றப்பட்டது.
பின்னர், உற்பத்தியியல் துறை உதவிப் பேராசிரியரும் தமிழ்மன்ற பொருப்பாசிரியருமான திரு.மு. திருமாலழகன் அவர்கள் விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் தம் உணர்ச்சி மிகுந்த தேன்சொற்களால் வரவேற்றார். உறுப்பினர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் புதியவர்களுக்கு ஆர்வம் ஊட்டும் வகையிலும் தமிழ் மன்ற செயல்பாடுகளை மாணவத் தலைவரான செல்வி மா.நர்மதா விளக்கி உரைத்தார். எத்தடையையும் உடைத்தெறிந்து மன்றம் பயணிக்கும்போதும்,தனது இலக்கான மொழிப்பற்றை தனித்திறமைகளுடன் மேம்படுத்துதல், உள்நாட்டுக் கலைகளை வளர்த்தல் ஆகியவை பற்றி ஆ.சரவண குமார், துணைச் செயலாளர் முன்மொழிந்தார்.
மாணவர்களின் மொழித்திறன் வெளிப்பாடுகளின் பிரதிபலிப்பாகவும், சென்ற ஆண்டிற்கான செயல்களின் வெற்றி வெளிப்பாடாகவும் திகழும் மன்றத்தின் “மெய்யுளி” இதழ் வெளியீடு விழாவிற்கு மகுடம் சூட்டியது.
விழாவின் முக்கியப் பிரமுகராக கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு செல்வி காவியா சிறப்பு வரவேற்பு அளித்தார்.பின்னர் அனைவரின் காத்திருப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் முனைவர் கோ. பழனி சிறப்புரை ஆற்றினார். உலகத் துறைகள் அனைத்திலும் தமிழின் ஆதிக்கம் பற்றியும் இலக்கியங்கள் பேசும் அறிவியல் ததும்பும் வரலாறுகளைப் பற்றியும் பேசி, மெய்சிலுர்க்க வைக்கும் வாரத்தைகளாலும் உதாரணங்களாலும் கைத்தட்டல்களைக் குவித்தார்.
படிப்பை முடித்துச் சென்ற பின்னரும் கலை உணர்வு கொண்டு இளவல்களை ஊக்குவித்து வழிநடத்த வந்திருந்த ஏழு மூத்த மாணாக்கர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. என்றும் தமிழ் மன்றத்தின் தூணாக ஆதரவு அளித்து வரும் உற்பத்தியியல் துறை ஆசிரியர் திரு. ரகுநாதன் அவர்கள் மொழிந்த அழகிய நயம் படர்ந்த கவிதையைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
பின்னர் பறை, சிலம்பம், பரதம், நாட்டுப்புற நடனம் என நேயர்களை உர்ச்சாகப் படுத்தி மேடையை அதிர வைத்தனர் தமிழ் மன்ற மாணவ விழுதுகள்.
விழாவைச் சிறப்பித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தமிழ் மன்றம் சார்பில் நன்றி நவின்றார் தமிழ் மன்றச் செயலாளர் கு.திவாகர் அவர்கள்.
தமிழால் அறிவியலையும் பண்பாட்டையும் மேம்படுத்தி காலம் காலமாக மார்த்தட்டிப் பெருமை கொள்ளும் தாய்நாட்டிற்கு மரியாதை செலுத்தும் வகையில் நாட்டுப்பண் ஒலிக்கப்பட்டது.
சுபம்.
இயற்றியவர்: பரத்வாஜ் முரளி, இரண்டாம் ஆண்டு, Aerospace Engineering.
புகைப்படம் பிடித்தவர்: அருணாச்சலம் (Arunachalam), இரண்டாம் ஆண்டு, RPT.