முண்டாசு கவிஞர் பாரதி

முறுக்கு மீசையும் , தலைப்பாகையும் கருநிற உடையும், வீரம் பொங்கும் கண்களும், நிமிர்ந்த நடையும், கவிப் புலமையும் என்று தமிழையும் தாய் நாட்டையும் தன் இரு கண்களாகப் போற்றி வாழ்ந்தவர் நம் பாரதியார்.


மகாகவி என்ற வாழ்த்தைப் பெற்று விடுதலை போராட்டத்தை நம்முள் விதைத்தவர். வேள்விப் பாட்டில் நம் பயங்களையும் துயரங்களையும் பாடியவர்.

“அக்கிக் குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ”

என்று நம்முள் வீரத்தையும் விடுதலை வேட்கையையும் விதைத்தவர்.

 

 

பாட்டுக்கொரு புலவர் பாரதி, நாட்டு விடுதலை மட்டுமல்லாது பெண் விடுதலைக்காகவும் பாடுபட்டவர்.

“போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகள்”

என்று புதுமைப் பெண்களைப் போற்றியவர்.

“நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?
வல்லமை தாராயோ- இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கோ ?”

என்று நம் அறிவுக் கண்ணைத் திறந்தவர்.

“நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொப்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
போனதெல்லாம் கனவினைப் போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ?”

என்று பாடி நம்மை நாமறிய வைத்த மகான் பாரதி அவர்கள்.

தமிழ் தன் செங்குருதியில் பாய, எவருக்கும் தலை பணியாமல் வீர நடையிட்ட பாரதி “உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்று நம்மை விட்டு உடலளவில் பிரிந்தாலும்

“தேடிச் சோறுநிதந் தின்று — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — நான்
வீழ்வே னன்றுநினைத் தாயோ?”

என்ற தன் பாடலைப் மெய்பிக்கும் வகையில் நம் சிந்தனைகளிலும் செயல்களிலும் இன்றளவும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

“எம் கவிஞனுக்கு என்றும் மரணமில்லை”

 

இயற்றியவர்: க.பவித்ரா , இரண்டாம் ஆண்டு, Electronics and Instrumentation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *