கனவானான் கண்ணன்- கவிதை

 

அடி மீது அடி வைத்து
வனத்தினுள் கால் பதித்து
செவ்வாய் இதழ் நடுங்க
நடந்தாள் ராதை.

கண் ஓரம் நீர் வடிந்த
சுவடுகளைக் காற்று வருட
கார்த்திகை குளிரில் தனியே
நடந்தாள் கோதை

வண்ண மலர் தோட்டத்தின் நடுவே
கண்ணன் அவன் கைப்பிடித்து
குழலிசையில் கரைந்ததை எண்ணி
நடந்தாள் பேதை

காரிருள் மேகங்கள் சூழ
மழை நீரில் கண்ணீர் ஒளிய
கண்ணனைத் தேடிக்கொண்டே
நடந்தாள் விரிந்தை

மாய மான் போல
அவனும் மறைந்து இருக்க
வலியிழந்த அன்னக்கிளியாய்
நின்றாள் மங்கை

தனிமரமாய் நின்ற அவளும்
தடுமாறி தரையில் வீழ
தாங்கிபிடிக்க கண்ணனை கூவி
அழைத்தாள் நங்கை

ஆக்களும் அதைக்கேட்டு
கண்ணனின் நாமத்தை போற்றி
குரல் கேட்ட திசையில் நோக்க
கண்டன அவளை

பிருந்தாவனம் தனிலே
தரையிறங்கிய நிலவைப் போலே
கிருஷ்ணனை மனதில் சுமந்து
கண் மூடினாள் பிருந்தை.

கனவிலே அவனைக் கண்டு
கண் கலங்க அனைத்து மகிழ
ஆவொன்று நாவால் துடைத்தது
அவள் கண்ணீரை

ராதை படும் வேதனை அறிந்தும்
கையறு நிலை தனிலே
விழி நீரைத் துடைத்த கண்ணனின்
நிலை உணர்வீரோ ?
வலி அறிவீரோ ?

 

கவிஞர் : க. பவித்ரா ,இரண்டாம்  ஆண்டு Electronics and Instrumentation.

 

 

 

 

– பவித்ரா
E&I

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *