பாரதம் எதை நோக்கி -பாகம் 2

 

 

வந்தோரை வரவேற்கும் நல் விருந்தோம்பல் கொண்டும் வாசல் தோறும் கொஞ்சி விளையாடும் மழலைகளைக் கொண்டும் பச்சை வண்ணமே பட்டாடையாகக் கொண்டும் நித்தமும் நிம்மதியாக வாழ்ந்த தேசம் நம் இந்திய தேசம் .இன்றோ செந்நீர் ஊறிய பாரதத்தில் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த காலம் மாறி நாட்டிற்காக ஒரு ரூபாய் கூடச் செலுத்த தயங்கும் காலம் வந்துவிட்டது .அதை காட்டிலும் இன்று நாட்டில் நடந்தேறும் சம்பவங்களைக் கேட்டால் . செவிகளை அடைத்துக் கொள்வதைக் காட்டிலும் அறுத்துக் கொள்ளலாம் போலிருக்கிறது . வாய் திறந்து கேட்டவனுக்கோ அலைச்சல் வாய் மூடி வந்தனம் செய்தவன் நிலத்திலோ விளைச்சல்( மன்னிக்கவும் விளைச்சலென்று சொல்வது தனவரவைத்தானே அன்றி தானிய வரவை அன்று. பணத்தையல்லவா நம் சந்ததி உண்ணப் போகின்றது ..)சரி விடுங்கள் .நிகழ்காலமே நிலையில்லாமல் உள்ள நிலையில் எதிர்காலத்திற்கு போவானேன் .நியாயத்திற்குப் போராடியவனுக்கோ சட்டம் பேசும் .

 

 

அநீதிக்குத் துணை நின்றவனுக்கு லஞ்சம் போன்ற பற்பலத் திட்டங்கள் பேசும் .கல்விமுறை பற்றி பார்த்திருந்தோம் ..இன்று சுதந்திரம் எப்படி சு ( யலாபம் ஈட்டும் ) தந்திரமாக மாறி வருகிறது என்பதைச் சற்று சிந்தையுள் சுமப்போம் .வாங்குகிறவனும் வழக்காடுகிறான் ; விற்பவனும் வழக்காடறான் . இரண்டிலுமே சுயலாபம் உண்டல்லவா ?! இந்த வாக்கியம் ஏனோ ஓரிடத்தில் மட்டும் தான் உண்மையாகிறது .. என்ன செய்வது .சூப்பர் மார்க்கெட்டில் வாய் திறவாத நாம் சுண்டைக்காய் விற்கும் கிழவியிடத்திலும் பெப்சி குடிக்க வாய் திறக்கும் நாம் பேரிக்காய் ,பனங்கிழங்கு விற்கும் பெரியவரிடத்திலும் அல்லவா பேரம் பேசுகிறோம் ( இவை சிறு வயதில் நான் கண்ட உண்ணும் பொருட்கள் ) .நன்னடத்தையைக் கையாள வேண்டிய நடத்துனர்கள் ‘ பொறு பா.வாங்கிக்கலாம் ‘ என்று வசனம் பேசும் வில்லன்களாகி விட்டார்கள் (ஒரு சிலரை மட்டுமே குறிப்பிடுகின்றேன் ) காலையிலிருந்து ஒவ்வொருவரிடமும் ஒரு ரூபாய் கொள்ளையடிக்கும் conductor ஆகட்டும் .ஒரு ரூபாய்க்காக ஒரு மணி நேரம் பேரம் பேசும் Consumer ஆகட்டும் .அல்லது ஒரு குடும்பத்திற்காக ஐந்து வருடங்கள் சுதந்திர நாடு என்னும் பெயரில் சுரண்டுவோராகட்டும் .எங்கு பார்த்தாலும் சுயலாபம் தான்..இவர்களை விட்டுவிட்டு இங்கே வருவோம் .. செய்யும் தொழில்களை கொண்டு சாதிகளை அன்று பிரித்தார்கள்.இல்லை.நான் சொல்வது முற்றிலும் தவறு . பெயர் சூட்டினார்களே அன்றி சாதி என்று சமத்துவத்தை அளிக்கவில்லை .வனையும் பானையானால் என்ன. விளையும் பயிரானால் என்ன . நெய்யப்படும் துகிலானால் என்ன .நெஞ்சின் மீது துயிலும் நகையானால் என்ன.அனைத்திற்கும் தரம் ஒன்றே.. ஒன்றைக் கொண்டு இன்னொன்றை அடைந்தார்கள் .பண்டமாற்றுமுறை எவ்வளவு நன்றாயிருந்திருக்கிறது .இன்றைய சூழலோ தலைகீழாகி விட்டது..எங்கேயோ சுற்றி எங்கேயோ வருவது போலுள்ளதல்லவா . யோசித்து பாருங்கள் பல விஷயங்கள் புலப்படும் .
சொந்த நாடே சொர்க்கம் தான் .சுயலாபம் எங்கிருந்து வந்ததோ? ..மாறவேண்டியவர்கள் நாமும் தான் .அடுத்த பதிவில் சந்திப்போம் …

 

இயற்றியவர் : மூன்றாம்  ஆண்டு CT  மாணவர் திரு.விக்னேஷ்