சூழ்நிலை கைதியாக உணர்ந்ததுண்டா ?

 

சூழ்நிலைக் கைதியான தருணமா?? அல்ல தருணங்கள் என்பதே சரியாகும் என்பது என் கருத்து. வாழ்வையே பலரும் சூழ்நிலைக் கைதியாகவே தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்…

 

யாரோ ஒருத்தரை சுட்டிக் காட்டுவது மதியீனம். நம் வாழ்வே, நாம் ஒரு சூழ்நிலைக் கைதிதான் என்பதைப் பல சமயங்களில் எடுத்துக்காட்டவில்லையா?

 

“இரவே!
தினமும் ஏன்
கறுப்பு உடை
அணிகிறாய்
பகலில் சாகும்
சத்தியங்களுக்காகத்
துக்கம் கொண்டாட…”

-அப்துல் ரகுமான்

 

என்னவொரு கூற்று!!

 

 

 

 

இப்புவியில் நடக்கும் ஒவ்வொரு அநீதிகளின் சரித்திரங்களைச் சற்றே புரட்டிப் பார்த்தோம் என்றால் அதில் சூழ்நிலைக் கைதியாகிப் போன நம் அழுக்குப் படிந்த முகம் வந்து போகும்.
நேர்மை, என்றும் இவ்வுலகில் மிகப்பெறும் அவமானங்களைத் தான் அடைந்திருக்கிறது. நேர்மையான ஓர் அதிகாரி ஊழலை எதிர்த்துப் போராடினால் அதற்குத் தன் உயிரை மட்டுமல்லாது தன் குடும்பத்தவரின் உயிரையும் பணயம் வைக்கும் அவநிலைக்கு முன் அவரது நேர்மை, நீதி அனைத்தும் சூழ்நிலைக் கைதியாய் போகிறது.

 

“நெருப்பினை ‘நிலவே’ என்பார்

நீசனைத் ‘தலைவா’ என்பார்

செருப்பையே மதிக்கும் இந்தத்

தேசத்தில் பிறந்தேன் பாவி!”

-கண்ணதாசன்

 

என்ற கவியரசன் கூற்றில் உள்ள மெய்யை மெய் மறந்து உணர்ந்தால் புரியும்.
வீட்டில் ‘பெரியவர்’ என்னும் ஸ்தானத்தில் இருக்கும் ஒருவர் அப்பட்டமாக ஒரு தவறை செய்யும் போது அதை சுட்டிக் காட்டும் நம் விரல்கள் வலுக்கட்டாயமாக மடக்கப்படும் போதும் ‘பெரியவர்களை எதிர்த்து பேசாதே’ என்ற கூற்றுக்களைக் கேட்கும் போதும்… குமுறும் நாம் அங்கு சூழ்நிலைக் கைதிதான்!
அளவற்ற செல்வத்திலும் ஆடம்பரமான அதிகாரத்திலும் திளைத்து நடைபோட்டு கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் ஆணவத்தை அடக்கத் துடிக்கும் நம் உணர்வுகளை ‘தனி ஒருவனால் இவர்களைத் தடுக்க முடியாது’ எனும் நிதர்சனம் நம்மை அங்கு சூழ்நிலை கைதி ஆக்குகிறது.

 

“விலையாகிப் போனதடா
காந்தியின் ரத்தம் – இங்கு
வீணாகிப் போனதடா
நேருவின் யுத்தம்
கொலையாகப் போகுதடா
சுதந்திர வாசம் – சிறைக்
கூண்டாகப் போகுதடா
பாரத தேசம்.”
– அப்துல் ரகுமான்.

 

 

அவரின் புலம்பல்களுக்குச் செவிசாய்க்கும் எண்ணம் நம்மிடம் இருந்ததே இல்லையே…!
ஒரு மதிப்பெண் குறைந்து தன் மருத்துவ கனவு தகர்ந்து விட்டதே என்று கண்ணீர் சிந்துபவர்கள் இருக்கும் போது அதில் பாதி மதிப்பெண் கூடப் பெறாத நிலையிலும் பல லட்சங்களின் பங்களிப்பால் மருத்துவர்கள் ஆகும் சிலரின் மகத்துவம் காணும் போது அங்கு சூழ்நிலை கைதியாகிவிட்ட நம்மை நாம் காண முடியும்.
அம்மதிப்பெண்களைப் பெறுவதற்காகத் தன் நீதிகளைத் தகர்த்து, எத்தகைய கலப்படத்திற்கும் கட்டுப்படும் கள்வர்களின் முன் சூழ்நிலை கைதியாகிப் போகும் நம் நேர்மையை என்னவென்று சொல்வது ?
கவிக்கோ சொல்லும் கருத்தென்ன…
கேட்போமா…
” கலைமகளைத் தேடிப் பார்த்தேன்
கொலை செய்யப்பட்ட
வீணையின் சமாதியில்
அவள்
விம்மிக் கொண்டிருக்கிறாள்.”
– கவிக்கோ
அரசு நிர்ணயித்த கல்லூரிக் கட்டணம் நான்கு லட்சம் என்கையில் எட்டு லட்சம் கேட்கும் தனியார் நிறுவனங்களின் அடாவடிக்கு முன்…
வாக்காளர் அடையாள அட்டைக்காகப் பத்தாவது முறையாகப் பதிவு செய்யும்படி வைக்கும் அதிகாரிகளின் அலட்சியங்களுக்கு முன்…
நம் உறவினர் மீதோ அல்லது பெற்றோர் மீதோ உள்ள தனிப்பட்ட பகையை நம்மீது திருப்பும் புரியாத ஆசிரியர்களிடம் ‘நான் என்ன தவறு செய்தேன்?’ என்று கேட்கக் கூட முடியாத நிலையில் , அந்த ஆசிரியரின் கேலிப் புன்னகையின் முன்…
என்று பல தருணங்களில் சூழ்நிலை கைதியாகிப் போன நம் வதனங்களே வரிசைக் கட்டி நிற்கும்!!
அதிலும் பெண்களின் நிலையை எப்படி சொல்வது !!!
மாதவராய்ப் பிறப்பதற்கு மாதவம் தான் செய்தோமா என்று சிந்தனை செய்யத் தூண்டும் இச்சமூக நியதிகளைத் தகர்த்தெறிய முடியாத சூழ்நிலை கைதிகள் தான் நாம்.
“ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ !! ”

-பாரதி

 

மகாகவியின் இக்கனவுகளையெல்லாம் களங்கப்படுத்தி , அதனைக் கொலை செய்த இச்சமூகத்தின் குணங்கள் அவமானச் சுவடுகள் .

 

 

 

 

சூழ்நிலைக் கைதி ஆவது பெருமை அல்ல.அது மிகப்பெரிய சிறுமை.சூழ்நிலை கைதி ஆகிறோம் என்றால் அதன் பின் நம் கோழைத்தனமோ அல்லது ‘நாம் ஏன் மெனக் கெட வேண்டும் ‘ என்னும் அக்கறையின்மையோ அல்லது ‘இதற்குப் போய் நீதிமன்றம் சென்று வழக்காட வேண்டுமா ?’ என்னும் அலட்சியமோ தான் மூலமாகும்.

 

 

நம் சமூக அமைப்பு , குடும்ப நிலை அனைத்தும் நம்மை சமூக அக்கறையோடு பயணி என்பதைப் போதிக்காமல் சுய அக்கறையோடு இரு ,அது போதும் என்று போதிப்பதே அதற்கு காரணம்.

 

 

“தாயே மாகாளி
சூழும் சுயநலமெனும்
பாழும் அரக்கனை உன்
திரிசூலம் கொண்டு
தீர்த்து முடித்தால்
நான் கூடக் கோவிலுக்குப் போவேன் ”

-வைரமுத்து

என்று கவிப்பேரரசர் அறிவிக்கும் அளவிற்கு ஆணவத்தில் ஆடிக் கொண்டிருக்கிறது நம் சுயநல சமூகம்.

 

 

 

அன்று திருதராட்டிரருடைய மகா சபையானது துருபத கன்னிகைக்கு அளித்த துன்பம் யாராலும் மறக்க முடியாதது.

அச்சபையில் இருந்த படித்தவர்களும் பண்பானவர்களும் பாண்டவர்களும் சூழ்நிலை கைதியானதால் ஏற்பட்ட இன்மையை என்ன சொல்ல !!

 

 

“………………….கல்வி
ஓங்கிய மன்னருஞ் சூதிலே – செல்வம்

வவ்வுறத் தாங்கண் டிருந்தனர் – என்றன்

மான மழிவதுங் காண்பரோ ? ”

(பாஞ்சாலி சபதம்)

 

 

இன்றும் பல துயிலுரிதல் சருக்கம் நடந்து கொண்டு தான் இருக்கிறது , ஆங்காங்கே..

பாஞ்சாலியைக் காக்க அன்று பார்த்தசாரதி வந்தான்.இன்றைய பாஞ்சாலிகளுக்கும் பார்வையாளராகத் தான் பலர் வருகின்றனர்.

வெட்கக்கேடல்லவா ???

 

 

நீதியையும் தர்மத்தையும் காப்பதற்காக எப்போதாவது சூழ்நிலைக் கைதியாவது அவசியம் தான்.

 

 

ஆனால் இப்போர்வையில் தன்னைப் புகுத்திக் கொண்டு அநீதி செய்ய துணிந்தால் அது அசிங்கம்.

 

 

ஆகையால் சூழ்நிலை கைதியாக நாம் ஒரு தருணத்திலோ அல்லது இரு தருணத்திலோ அல்ல. நம் வாழ்வையே நாம் அப்படித் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது என் கருத்து.

 

 

கொந்தளித்துக் குமுறி, முகடு உடைத்துச் சிதறிய என்னுடைய இந்த கோப அக்னியானது கங்காகி களையிழந்து போவதும் , சிறு இலையில் பற்றி காட்டுத் தீயாய்ப் பரவுவதும் நம் எண்ணங்களில் மனங்களில் உள்ளது ! சற்றே சிந்திப்போம் !!
“பொங்கி எழட்டும் நெருப்பு -அந்த
நெருப்புக் கென்ன பொறுப்பு ? – அட
இங்கே தோழா இனிமேல் வேண்டும்
எரிக்கத் தெரிந்த நெருப்பு ”

-கவிப்பேரரசு

 

இயற்றியவர் :   ந.காயத்ரி, இரண்டாம் ஆண்டு ECE .