இந்தியாவும் விண்வெளி ஆராய்ச்சியும்

 

விண்வெளி ஆராய்ச்சி குறித்து பொதுவாக எழுதுவதைக் காட்டிலும் நம் தேசத்தோடு பிறவற்றை ஒப்பிட்டுரைப்பதே தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருக்கும். இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் சமீப கால அசுர வளர்ச்சியை ஒற்றை வரியில் சுருக்கமாகக் கூற வேண்டுமானால், மட்டைப்பந்துக்கு இணையாக சிறந்து விளங்கும் துறை என்பதே பொருத்தமாகும். இந்தியா ஒன்றும் அமெரிக்கா, ரஷ்யா போன்று ஆரம்ப கால கட்டத்திலிருந்தே இவ்வகை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கவில்லை. அந்நாடுகளுக்குப் பிறகே நாம் அத்துறையில் கால்பதித்தோம். ஆனால் ஆச்சரியப்படும் விதத்தில் அவர்களுக்கு இணையாக, ஏன் சில தருணங்களில் அவர்களை விஞ்சும் அளவுக்கு நம் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. இத்துறையில் நம்மைத் துச்சமென நினைத்து ஏளனப்படுத்தியவர்களும் தற்போது மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு நம் ஆற்றல் பெருகியுள்ளதை எண்ணி வியந்து பாராட்டாமலிருக்க முடியவில்லை.

 

ஆரியபட்டா தொடங்கி திங்களுக்கு அனுப்பிய சந்திராயன், செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய மங்கள்யான் என்று செயற்கைக் கோள்களின் பட்டியல் நீண்டு கொண்டேயிருக்கிறது.  இஸ்ரோவின் வருங்காலத் திட்டங்களும் நம்மை மலைப்பூட்டுகின்றன. சந்திரனின் பரிணாமம், தோற்றத்தைப் புலப்படுத்தும் சந்திராயன்-2, சூரியனின் காந்தப்புல அமைப்பு, சக்தி பற்றி மேலும் பல உண்மைகளைக் கண்டறிய உதவும் ஆதித்யா, இராணுவச் செலவைக் குறைக்கவும், விண்வெளிச் சுற்றுலாவை அறிமுகப்படுத்தவும் உதவும் அவதார் என தொலைநோக்குப் பார்வையோடு கூடிய பல செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படத் தயாராகி வருகின்றன. புவியின் நிலப்பரப்பு, மண்வளம், கடல்மட்டம் போன்றவற்றை ரேடார் புகைப்படங்களுடன் ஆராய்தல், வெள்ளி கிரகத்தை ஆராய நாசா இஸ்ரோ இடையேயான பேச்சுவார்த்தை, மறு உபயோகத்திற்கு வித்திடும் வகையில் ஏவுகணைகள், பி.எஸ்.எல்.வி.யை வணிகமயமாக்குதல் உள்ளிட்ட குறிக்கோள்களுடன் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை நோக்கும்போது வான்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது கண்கூடாகத் தெரிகிறது.

 

 

வளர்ச்சி ஒருபுறமிருக்க அதற்குச் செலவளிக்கும் வகையில் நம் பொருளாதாரம் உயர்ந்த நிலையில் இருக்கிறதா என்ற வினா எழுகையில் விழி பிதுங்கித்தான் நிற்க வேண்டும். விண்வெளியில் ஆர்வம் காட்டும் ஏனைய தேசங்களின் பின்புலத்தை உற்று நோக்கினால் கசப்பான உண்மை தலைகாட்டும். அந்நாடுகள் அனைத்தும் வல்லரசு அந்தஸ்து பெற்ற வளர்ந்த நாடுகள் என்பதே காத்திருக்கும் அதிர்ச்சி. பெருநாடுகளோடு போட்டியிடுகிறோம் என்று பெருமை ததும்பும் தொனியில் பேசினாலும் ஆழ்ந்து சிந்திக்கையில் அகலக்கால் வைப்பது புத்திக்கு எட்டும். இந்தியாவில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் ஏராளம் நிலுவையில் உள்ளன. பொய்த்துப்போன மழையால் பாழாய்ப்போன விவசாயம், கட்டுக்கடங்காமல் வளர்ந்து வரும் மக்கட்தொகையை ஈடுகட்டும் வகையில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படாததால் உண்டான வேலையில்லாத் திண்டாட்டம், முறையற்ற நிருவாகத்தாலும் திறமையற்ற ஆளுமைப் பண்பாலும் தலைதூக்கிய பணவீக்கச் சிக்கல், நீர் மேலாண்மை பற்றிய ஏட்டறிவு கூட இல்லாத ஆட்சியாளர்களாலும் விழிப்புணர்வு இல்லாத மக்களாலும் ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பஞ்சம் என்று பட்டியலிட்டால் இந்தியா அனுப்பிய செயற்கைக் கோள்களின் எண்ணிக்கையை விஞ்சி விடும்.

 

 

இதனைச் சீரமைப்பதன் அவசியத்தையும் அவசரத்தையும் புரிந்து கொள்வோமேயானால் பிற துறைகளில் முதலீடு செய்யவே தோன்றாது. நாட்டையே அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும் இத்துணை பெரிய அபாயங்களைக் கண்முன் நிறுத்திக் கொண்டு அலட்சியத்தோடு தான் நாமும் திரிகிறோம். தென்னிந்தியாவின் காய்ந்த நதிகளை என்றும் வற்றாத வட இந்தியாவின் நதிநீரால் நிரப்பலாம். காந்தி வாழ்ந்த காலத்தில் இருந்தே பேசப்பட்டு வரும் தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தைப் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றலாம். இத்தகைய மதிப்பு மிகுந்த திட்டத்தை இப்போதும் நிறைவேற்றாமல் எப்போதுதான் செய்யப் போகிறோம்? இதன்மூலம் வறட்சியால் பயிர் கருகி மனம் வெந்து சாகும் உழவர்களின் உயிரைக் காப்பது மட்டுமின்றி உணவு உற்பத்தியையும் உறுதி செய்யலாம். மழையே பெய்தாலும் நீரை சேமித்துக் கூட வைக்க முடியாத நிலையில் ஏரி, குளம், குட்டைகள் தூர்வாரப்படாமல் உள்ளன. இந்த அவல கதியும் களையப்பட வேண்டிய ஒன்றே. இவ்வாறான அத்தியாவசியத் தேவைகளுக்கு  நிதியைப் பெருமளவில் ஒதுக்கீடு செய்து பணியைத் துரிதப்படுத்தலாம்.

 

 

செவ்வாய் கிரகத்திலும் சந்திரனிலும் நீர் இருப்பதைக் கண்டறிந்ததன் மூலம் தமிழக அணைகளின் நீர்மட்டத்தை உயர்த்த முடியுமா, இல்லை சென்னைவாசிகளின் தண்ணீர் தாகத்தைத் தான் தணிக்க இயலுமா? உண்பதற்கும் குடிப்பதற்கும் கூட உறுதி நிலை இல்லாத தேசத்தில் வான்வெளி ஆராய்ச்சி இன்றியமையாததோ? இதனை  இருப்பதை விட்டுவிட்டு பறக்க நினைக்கிறோம்  என்பதில் தவறென்ன இருக்க முடியும்? நூற்றுக்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை ஒரே ஏவுகணையில் அனுப்பினோம் அயல்நாட்டில் வாடகை மகிழுந்தில் ஒரு கி.மீ. பயணிப்பதற்கு ஆகும் செலவை விட நமது ஏவுகணை செவ்வாய் கிரகம் நோக்கி ஒரு கி.மீ. பாய குறைந்த செலவே ஆகிறது முதலிய கூற்றுகள் யாவும் முகநூலில் பதிவிட வேண்டுமானால் பெருமிதம் தரலாம்; நாட்டின் வளர்ச்சிக்கோ, தேவைகளைப் பூர்த்தி செய்யவோ உதவாது என்பதை உணர வேண்டும்.

 

அரசு அனைத்துத் துறைகளுக்கும் தகுந்த நிதி ஒதுக்குகிறது. அவற்றை அந்தந்த துறை அதிகாரிகள் சரிவர பயன்படுத்துவதன் மூலமே வளர்ச்சி பெற்று நன்னிலை எய்த முடியும். ஒன்றின் வளர்ச்சிக்கு மற்றொன்றை புறந்தள்ளுதல் ஏற்புடையதல்ல  என்ற வாதத்தையும் மறுப்பதற்கில்லை. வான்வெளி ஆராய்ச்சியைத் துறந்து அனைத்தையும் வேளாண்மையில் செலவிட அறிவுறுத்துவதல்ல என் நோக்கம். அதே சமயம் புகழின் உச்சியில் இருக்கும் வான்வெளி ஆராய்ச்சித் துறையின் செயல்பாடுகளை முடக்கி வீணாக்குவது அறியாமையின் பாற்படும். வேற்று கிரகங்களுக்கு செயற்கைக் கோள்களை அனுப்புவதைத் தவிர்க்கலாம். நாடு நிறைந்த வளம் பெறும் வரை பாதுகாப்பு, தொலைதொடர்பு, வானிலை போன்ற அவசியமான காரியங்களுக்கு மட்டும் செயற்கைக் கோள்களை அனுப்பலாம். மேற்கூறிய கருத்துக்கள் சற்று பிற்போக்குச் சிந்தனை உடையனவோ என்று தோன்றும். இருப்பினும் காலம் கனிந்து வரும் வரை விண்வெளி ஆராய்ச்சி்க்கு முன்னுரிமை அளிப்பதையோ, அத்துறைக்கு தண்ணீரைப் போன்று செல்வத்தை வாரி இறைப்பதையோ தவிர்ப்பதே சிறந்த முடிவாக இருக்கும். வளமாவருங்காலம் வெகுதொலைவில் இல்லை.

 

 

இயற்றியவர் : கெளதம்  மூன்றாம் ஆண்டு CT .