பெற்றும் பெறாமல்

 

 

ஆள் நடமாட்டம் இல்லாத மிகவும் சிறிய அக்கிராமத்து ஸ்டேஷனில் நான் பயணித்து வந்த ரயில் நின்றது. ரயில் வந்தபின் இருக்கும் பயணிகளின் ஓட்டமோ,தேநீர் விற்பவரின் இரைச்சலோ, போர்ட்டர்களின் ஆர்ப்பாட்டமோ இல்லை. ஒரே ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் மட்டும் கையில் சிவப்பு,பச்சை கொடியுடன் நின்று கொண்டிருந்தார்.

 

அங்கிருந்த அமைதி என் மனதில் இல்லை. பூகம்பமும் இடியும் மின்னலும் புயலும் ஒரு சேர என்னை ஒரு வழி ஆக்கிக் கொண்டிந்தன.அதே நேரத்தில் ஒரு பெண் சுமார் 24 வயது இருக்கும்.என் எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.அவள் வயதை விட சற்றே மெலிதான உடலமைப்பு. நம் மண்ணின் நறமுடைய தோல். பலமுறை கட்டி நைந்த சேலை. எண்ணெய் தேய்த்த பின்னல். காதில் பளபளப்பு குறைந்த சிறிய ஜிமிக்கி.அவள் முகத்தில் இருந்த உற்சாகமும், குதூகலமும்,உண்மை சிரிப்பும் அவள் மேல் பொறாமை உண்டாக்கியது.

 

 

சிறிது நேரம் கழித்து,
“என்ன பண்ணிட்டு இருக்கிங்க?”அவளே ஆரம்பித்தார்.
” தெரில. வாழ்க்கைல என்ன பண்ண போறேன்னே தெரில”
ஏனோ அவரிடம் எல்லாத்தையும் கூறி விட வேண்டும் என தோன்றியது. அவள் மெலிதாக சிரித்தாள்.

 

“நான் வாங்குன அடியும் பட்ட கஷ்டமும் தெரிஞ்சா சிரிக்க மாட்டீங்க” என்றேன் .
“உங்க கஷ்டம் எனக்குத் தெரியாது. ஆனா யாருக்கும் கஷ்டம் இல்லாம இல்லனு மட்டும் தெரியும்”.
நான் பதில் கூறவில்லை. அவள் தொடர்ந்து,
“நான் உங்க கிட்ட பேசிட்டு இருந்ததுல எங்க போக ரயில் ஏறுனேன்றத மறந்துட்டேன்”
அந்த துக்கத்திலும் நான் சிரித்தேன்.”

 

அதப் போய் எப்டி மறந்தீங்க, உங்களப் பாத்தா எனக்குப் பரிதாபமா இருக்கு”என்றேன்.

 

“என்னப் போல தான் நீங்களும் எதுக்கு ஆரம்பிச்சோம்னே மறந்துட்டு வாழ்ந்துட்டு இருக்கீங்க. வாழ்க்கை பரிதாபமா உங்களப் பாக்குது. என் ஊர் வந்துடுச்சு நான் போயிட்டு வரேன்” என்று அவர் இறங்கி சென்று விட்டார். என் முகத்தில் அறைந்ததைப் போல் இருந்த்து.

 

அச்சிறு வரி என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தைச் சொல்ல இயலாது. திடீரென என் வலியைச் சிறுமையாக உணர்ந்தேன். அனைத்தும் அழகாகத் தோன்றியது. மீண்டும் தொடங்கினேன், இலக்கோடு கூடிய புதுவாழ்வை.
இரண்டு வருடம் கழித்து வெற்றிகள் வந்த பின் அவளைக் காண ஏக்கம் கொண்டு மீண்டும் அவ்வூருக்கு வந்தேன்.அடையாளம் கூறி விசாரிக்கையில் மணமாகியும் குழந்தை இல்லாமையால் மலடி பட்டத்தை மணம் ஏற்காமல் உயிர் விட்டதை அறிந்தேன்.இதயம் நின்றது. இறந்து கிடந்த என்னை உயிர்ப்பித்த அவள் என் தாயினும் மேலான தாயன்றோ? வாழ்வை இத்துணை இலகுவாகப் புரிந்து அதை அடுத்தவருக்கு சொன்ன அவர் ஆயிரம் பிள்ளைகளை நன்வழியில் வளர்த்ததற்கு சமம் அன்றோ? இன்னும் பலரை தன் புன்னகையால் உருமாற்றிய அவர் உலக மக்களுக்குத் தாயான பூமாதேவியினும் மேலான பிறவியன்றோ? இதில் அனைத்திலும் தாயன்பு காணாமல் சமூகம் தாயென்று விவரிப்பது எதையோ? இன்பம் விதைத்துச் சிரிப்பைத் தூவி பலரை மீண்டும் பெற்றெடுத்த எவருக்கும் கிட்டாத மிகவும் உன்னதமான தாய்ப்பேறு பெற்ற அவ்வற்புதத்தை தாயாக தகுதி இல்லை எனக் கொன்ற இச்சமூகம் தாயென்பது யாதென என்றும் உணர போவதில்லை.

 

 

மனதில் பாரத்துடன் கண்ணில் நீருடன் மீண்டும் ரயில் நிலையம் நோக்கி நடந்தேன் . அத்துறுதுறு கண்களையும் இடைவிடாத புன்னகையும் கொண்ட அப்பேரழகான முகத்தை மீண்டும் காண வேண்டும் என்ற ஏக்கத்துடன்.

 

இயற்றியவர் :  காவியா ஜவஹர்  இரண்டாம்  ஆண்டு  Production Engineering.