மாலை மர்மங்கள் – அத்தியாயம் 12

 

 

இதுவரை:

தொழிலதிபர் ஷ்ரவனின் மனைவி சுதா கொல்லப்படுகிறார். துப்பறிவாளர் சதுர் நாத்திடம் வழக்கு வழங்கப்படுகிறது. சுதாவின் குடும்பத்தினரை முதலில் விசாரிக்கிறார். சுதாவின் வீட்டில் சில துப்புகள்  கிடைக்கின்றன. ஷ்ரவனின் நண்பன் மற்றும் சுதாவின் தோழியின் மூலம் அவர்களது கடந்த காலம் வெளிப்படுகிறது. சுதாவின் முன்னாள் காதலன் ஸ்ரீனிவாஸின் மனைவி மாதவி அதிர்ச்சிமிக்க தகவல்களைக் கூறுகிறாள். இதன் மூலம் சதுர் கொலையாளியை நெருங்குகிறார்.

அத்தியாயம் 12:

சதுர் வரும் பொழுது, முன்பு போலவே விநாயக்கின் பிள்ளைகள் இருவரும் காந்தத்துடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அச்சமயம் அவர்களைச் சுற்றி யாருமே இல்லை. அருகில் வந்துகொண்டிருந்த சதுரைக் கண்டதும் அவரின் யமஹா எங்கு இருக்குமென்று தேடினர். கெத்தான வண்டியை யாருக்குத் தான் பிடிக்காது.

அருகில் வந்த அவர், ” பிள்ளைகளா… உங்கள் அம்மா இல்லையா ? ” என்று கேட்க “அவங்க வெளியே போயிருக்காங்க ” என்று ஒருமித்த குரலில் இருவரும் ராகம் பாடினர்.

“காந்தம் வைத்து என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?”

“விளையாடுறோம். இந்தக் காந்தம் இரும்பில் ஒட்டிக்கொள்ளும். பார்தீங்களா ?” ஆவலுடன் கூறினாள் அவள்.

“எனக்கு அதைத் தருவீர்களா ? அதைப் பார்க்கும் போது என் சிறுவயது ஞாபகம் வருகின்றது.” சதுர் கேட்க,

“நாங்கள் ஆளுக்கொரு காந்தம் வைத்திருந்தோம். ஆனால் என்னுடையது தொலைந்துவிட்டது. அதனால் எங்களால் இதைத் தர முடியாது ” என்று சோகமாகக் கூறினாள்.

“அச்சச்சோ…எப்படி காணாமல் போனது ?”

” நாங்கள் காந்தங்களை ஒளித்து வைத்து விளையாடினோம். அவள் சமையலறையிலும் நான் அப்பாவின் சட்டைப்பையிலும் ஒளித்து வைத்தோம். அப்பாவின் சட்டையில் வைத்த காந்தம் காணாமல் போய்விட்டது.”ஒருத்தி கூற இன்னொருத்தி தொடர்ந்தாள்,

” ஆமாம். அம்மா காந்தத்தைக் காக்கா தூக்கிட்டு போயிடுச்சுனு சொன்னாங்க. அந்த காக்கா மட்டும் கையில கிடைச்சுது அவ்வளவுதான் . திருட்டுக் காக்கா ” அவள் கோபமாகப் பேச சதுருக்கோ சிரிப்பு தான் வந்தது.

” சரி மா…கோபப்படாதே. சதுர் இருக்க கவலையேன் . நான் கண்டுபிடித்துத் தருகிறேன். காந்தம் எப்படி இருக்குமென்று சொல்லு ? ”

” கருப்பா சதுர வடிவத்துல இருக்கும். நான் வரைந்த பூ படமிருக்கும். அதுக்கப்பறம் ‘S’ -னு பொறிக்கப்பட்டிருக்கும்…”

” என்னது ‘S’ -ஆ ?”

” ஆமா. என் பேரு சிவப்பிரியா…அதான் ‘S’. அவப் பேரு கவிப்பிரியா. ”

அப்போது கவிப்பிரியா அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநரையும் காவலர்கள் இருவரையும் கண்டு , ” யார் அவர்கள் ?” என்று கேட்டாள்.

” அவர்களா ? என் நண்பர்கள் தான்.”
” சரி உங்கள் காந்தம் உங்களுக்கு வேண்டுமா ? ” சதுர் கேட்க

” ஆமாம். ஆனா அதுதான் காக்காகிட்ட இருக்கே ”

” எந்த காக்கா ?… ஓ…அந்த காக்காவா…அதுவந்து எனக்கு மந்திரம் மாயமெல்லாம் தெரியும். இப்போதே மந்திரம் செய்து காந்தத்தை வர வைக்கிறேன் பாருங்கள்.
காளி சூளி தக்காளி… வாலி நீலி சுண்டெலி…” மந்திரம் போடுவது போல் பாவனை செய்து தன் சட்டைப்பையில் இருந்து அந்தக் காந்தத்தை எடுத்தார்.

ஆவலுடன் அதைக் கண்ட பிள்ளைகள் அதே காந்தம் தானா என்று சரிபார்த்தனர். அவர்கள் வரைந்த அதே பூவும் ‘S’-உம் இருந்தது. சந்தோஷத்தில் “ஹே” என்று கத்தினர்.

அந்நேரம் நந்தினி அங்கே வந்தாள்.
” இங்கே என்ன நடக்குது? உங்களுக்கு இப்போ என்னங்க வேணும்? ” கொஞ்சம் கோபமாகக் கேட்டாள். பிள்ளைகளை உள்ளே விளையாடும் படி அனுப்பிவிட்டு , நந்தினியின் பக்கம் திரும்பிய சதுர்,

” சுதாவைக் கொன்றதற்காக உங்கள் கணவரைக் கைது செய்ய வந்திருக்கிறோம் ” என்றார்.

காவல் ஆணையரின் அலுவலகத்திற்குச் சதுர் வரவழைக்கப்பட்டார். நந்தினியும் ஷ்ரவனும் அங்கே இருந்தனர்.

“அப்படி என்ன துப்புகள் ? எவ்வித விளக்கங்களும் அளிக்காமல் அவர் என் வீட்டில் நுழைந்து என் கணவரைக் கைது செய்தார். எனக்கு நீதி வேண்டும். ”

“பொறுமையாக இருங்கள். சதுர் நீங்கள் பேசுங்கள்.”

“சோர்வாக இருக்கிறது. ஒரு கப் காபி கிடைக்குமா ?”

“அதெல்லாம் தருகிறேன். முதலில் இந்த வழக்கைப் பற்றிக் கூறுங்கள்.”

“ம்ம்…நான் மாதவியை விசாரித்த பிறகு என் சந்தேகமெல்லாம் அந்த ஆட்டோக்காரர் மீதுதான் திரும்பியது. ஆள்நடமாட்டம் பெரிதாக இல்லாத பகுதிக்கு ஏன் அவன் செல்ல வேண்டும்?

“அவரை விசாரிக்கச் சென்றேன். அங்கே துப்பாக ஒரு காந்தத்தைக் கைப்பற்றினேன்.”

“ஒரு காந்தத்தை வைத்து எப்படி….” ஷ்ரவன் முடிப்பதற்குள் ,

” அந்த காந்தம் விநாயக்கின் மகளுடையது. அவளே காவலர்களின் முன்னிலையில் இதை அவள் தன் தந்தையின் சட்டைப்பையில் வைத்ததாகக் கூறினாள். அந்த ஆட்டோக்காரரும் விநாயக் தான் தன் வண்டியில் ஏறினார் என்று உறுதியாகக் கூறுகிறார்.

“மேலும் நந்தினியின் தங்கச் சங்கிலி  (gold chain) காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதையும் கண்டுபிடித்து விட்டோம். விநாயக் தான் அடகு வைத்திருக்கிறார்… நாலாயிரத்திற்கு. அதை அவர் இக்கொலையில் பிரயோகித்திருப்பார் என்று சந்தேகப் படுகிறேன்.”

நந்தினி இப்போது அழுதுகொண்டிருந்தாள் . ஷ்ரவனோ கேள்விக் கனைகளைக் தொடுத்துக் கொண்டிருந்தார். விநாயக்கிற்கும் இந்தக் கொலைக்கும் என்ன சம்மந்தமென்று கேட்டுக்கொண்டே இருந்தார்.

“விநாயக் வீட்டில் இரத்தக் கறை கொண்ட ஒரு சட்டை இருந்தது. அதைப் பரிசோதித்ததில் சுதாவின் இரத்த மாதிரிகளுடன் சரியாகப் பொருந்தியது. அதன் ரிப்போர்ட் தான் இது.” என்று அதை ஆணையரிடம் நீட்டினார்.

நந்தினி இப்போது அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்துக்கொண்டு இருந்தாள். ஷ்ரவனோ…விநாயக்கா சுதாவா என்று மதில் மேல் பூனை போல் பெரும் குழப்பத்திலிருந்தார்.

“சரி.நீங்கள் கூறுவது போல என் அண்ணன் தான் கொலைகாரன் என்றால் அதுக்கு காரணம் தான் என்ன ?”ஷ்ரவன் கேட்க

“அதை ஒருவர் தான் சொல்ல முடியும். உங்கள் அண்ணன் தன் திருவாயைத் திறக்கும் போது மாலையில் நடந்த மர்மங்கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வரும்”

சதுர் தன் வீட்டிற்குத் திரும்ப மதியம் ஆயிற்று. காயத்ரியை எங்கு தேடியும் காணவில்லை. பக்கத்து வீட்டில் விசாரிக்க, “உங்க சம்சாரத்துக்குத் திடீர்னு வலி வந்துடுச்சு. என் மனைவி தான் பக்கத்து தெருவில இருக்குற மருத்துவமனைக்குக் கூட்டிட்டு போயிருக்கா ” அவர் சொல்ல தன் யமஹாவில் வேகமாகப் பறந்தார் சதுர்.

அங்கே வரவேற்பறையில் அந்த பக்கத்து வீட்டு அக்காவைக் கண்டார். “ரொம்ப நன்றி மா. நீங்கள் செய்த இவ்வுதவியை நான் என்றுமே மறக்கமாட்டேன்.”

“அதெல்லாம் ஒரு சிரமமும் இல்லைங்கனா. அந்த நர்ஸ்(nurse) அம்மா ஏதோ கையெழுத்து கேட்டாங்க.”

“அப்படியா…சரி மா நான் பாத்துகிறேன்.”அப்போது அந்த செவிலியர் மறுபடியும் வர, கையெழுத்து போட்டுவிட்டு அந்த பக்கத்துவீட்டு பெண்ணை வழியனுப்பினார். காயத்ரியை நினைத்து மிகவும் பயந்தார்.

“அவளின் முகத்தை ஒருமுறை கூட இறுதியாகப் பார்க்கவில்லையே. மிகப்பெரிய பாவியாகிவிட்டேனே” என்று மிகவும் வருந்தினார்.

அப்போது திடீரென்று ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. “உங்களுக்குப் பொண் குழந்தை பிறந்திருக்கு. வாழ்த்துக்கள். ”

இரண்டு நாட்கள் கடந்தது. சதுர் தனது மனைவியுடனும்  குழந்தையுடனுமே அனைத்து நேரத்தையும் செலவழித்தார். இந்த வழக்கைப் பற்றி யோசிக்க அவருக்கு நேரமே இல்லை. “வாங்கும் சம்பளத்திற்கு கொஞ்சமாவது அந்த காவல் துறையினர் வேலை செய்யட்டும்” சதுர் நினைத்தார்.

“சார், கொஞ்ச நேரம் வெளியே இருங்கள். அவங்க குழந்தைக்குப் பால் தர வேண்டும் “செவிலி அவரை வெளியேற்றினார். வரவேற்பறையில் செய்தித்தாளைப் படிக்க ஆரம்பித்தார்.

முதல் பக்கத்திலேயே

” சுதா கொலை
வழக்கு : திடுக்கிடும் உண்மைகள் “

சுதா அவரை வியாபாரத்தில் ஏமாற்றி, அவரது சொத்துக்கள் அனைத்தையும் ஏமாற்றிவிட்டதாக நேற்று காவலர்களிடம் தெரிவித்திருக்கிறார்.தன் தம்பி ஷ்ரவனின் மனைவி சுதாவை தான் தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டார் . “நான் எப்போதுமே தொழில் ஆரம்பிக்க வேண்டுமென்று விரும்பினேன். சுதா என்னை  வியாபாரத்தில் உதவினாள். சுதாவை நந்தினி விரும்பவில்லை என்பதால், அதை இரகசியமாக வைத்தேன். சில மாதங்களுக்கு, வணிகம் லாபகரமானதாக இருந்தது. ஆனால் அவள் என்னை ஏமாற்றினாள்.என் சொத்து முழுவதையும் இழந்தேன். ஒரு மாதத்திற்கு முன் தான் என் இழப்புக்கு பின்னால் சுதா இருந்ததை அறிந்தேன். அவளுடைய பெயரில் என் எல்லா சொத்துக்களையும் மாற்றிக்கொண்டிருந்தாள் . அந்த இழப்பு காரணமாக, நான் என் மரியாதையை இழந்து விட்டேன். நான் அவளை மிரட்டி என் சொத்துகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தேன்… ஆனால் அவள் துப்பாக்கியைக் காட்டினாள், என்ன செய்வதென்று தெரியாமல் அதைப் பிடுங்கினேன் … பிறகு … நான் … “அவர் தொடர்வதற்குள் இரும்மல் ஏற்பட்டு ரத்தம் துப்பினார். உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

காவலர்கள் “அவர் கொலை செய்த அந்நாளில் போதைப் பொருட்களை உண்டிருக்கிறார். அதிலிருந்து இப்படி நோய்வாய்ப்பட்டு கிடக்கிறார் ” என்றனர்.

ஒருவழியாக முடிந்துவிட்டது என்று பெருமூச்சு விட்டபடி எழுந்தார் சதுர். தன் மனைவியிடம் இதைக் கூற “போதைப்பொருளால் தான் அவர் கொலை செய்திருக்கிறார். எது எப்படியோ…என் கணவர் என்னுடன் இருக்கிறார். எனக்கு அதுவே போதும்.” சிரித்தபடி தன் மனைவியை அணைத்துக்கொண்டார் துப்பறியும் கில்லாடி சதுர் நாத்.

-சுபம்

(படியுங்கள் ) அத்தியாயம் 11

மாலை மர்மங்கள் எங்கள் பிரத்தியேக குற்ற நாவல் தொடர். எழுதியோர் :  சுவாதி மோகன் , அனிருத் ரமேஷ் (ஆங்கிலம்) மற்றும் அருண் பாலாஜி , க. பவித்ரா , கிஷோர்  (தமிழ்)