மாலை மர்மங்கள் – அத்தியாயம் 10

 

 

இதுவரை:

 

தொழிலதிபர் ஷ்ரவனின் மனைவி சுதா கொல்லப்படுகிறார். துப்பறிவாளர் சதுர் நாத்திடம் வழக்கு வழங்கப்படுகிறது. சுதாவின் குடும்பத்தினரை முதலில் விசாரிக்கிறான். சுதாவின் வீட்டில் ஓர் கத்தியும் சுதா ஓர் ஆடவனுடன் இருக்கும் புகைப்படமும் கிடைக்கின்றன. அவன் அடுத்து ஷ்ரவனின் நண்பன் செம்பியனைச் சந்திக்கிறான். அவன் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிடுகிறான். சதுர் தன் வீட்டிற்கு திரும்பும் போது தன் மனைவி காயத்ரியைக் காண்கிறான். அவள் அவனிடமிருந்து வழக்கு பற்றிய தகவல்களை அறிந்த பின் சுதாவின் நண்பர்களிடம் விசாரிக்க அறிவுறுத்துகிறாள். சுதாவின் தோழி சாவித்ரி மூலமாய் சுதாவின் முன்னாள் காதலன ஸ்ரீனிவாஸ் பற்றிய தகவல் கிடைக்கிறது. சதுர் அவனை சந்திக்க பெங்களூர் செல்கிறான். அங்கே அவனுக்கு புது தகவல்கள் கிடைக்கின்றன.

அத்தியாயம் 10:

 

“என்ன சொல்லிருந்தீங்க ? திரும்பவும் ஒரு டேக் போலாமா ?”

என்றார் அந்த எழுதிக் கொண்டிருந்த காவலர்,உணர்வுகள் போதாத ஓர் காட்சியில் மீண்டும் எடுக்கும் இயக்குனரைப் போலே.
காவலர்கள் குற்றம் நடந்த இடத்தில் இருந்தோரிடம் பெறும் வாய் வழித் தகவல்களை அவர்கள் ரெக்கார்டுகளில் (record) எழுதி வைத்துக் கொள்வர். அந்த செயல் நடந்துக் கொண்டிருந்தது.
மாதவி மருத்துவமனையில் பக்கத்து வார்டிற்கு அழைத்து வரப்பட்டாள். சதுருடன் இரு உள்ளூர் காவலர்கள் இருந்தனர்.

” முதலில் உங்களை அறிமுகப்படுத்துங்க ”

“நான் திருமதி மாதவி ஸ்ரீனிவாஸ். கல்லூரி நாள்ல தான் நான் முதல்ல அவரை பார்த்தேன். அவரை விரும்பினேன். ஆனால் அவரோ சுதாவுடன் இருந்தாரு”

பிடிக்காத காய்கறியை உண்ணும் குழந்தையைப் போல் பாவித்தாள் மாதவி. வாழ்வின் அந்த பகுதி அவள் விரும்பவில்லை என்பது நன்கு தெரிந்தது.

“சுதா அவரை உண்மையாக காதலிக்கலை. சுயநலம் மட்டுமே அவள் நோக்கம். தொழிலதிபர் ஷ்ரவனிடம் இருந்து திருமண பிரபோசல் (proposal) வந்ததும் அதை ஏத்துக்கிட்டு அவரை மணந்தாள் அந்த பாதகி. நான் ஸ்ரீனிவாஸை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நான் மட்டும் தான் சம்பாதித்துக் கொண்டிருந்தேன். குடும்பத்திற்கு பணத் தேவையாய் இருந்தது. ஸ்ரீனிவாஸ் அப்போது வேலையில்லா பட்டதாரியாய் இருந்தாரு. ஷ்ரவனின் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்களை தேடிக் கொண்டிருப்பதாய் தெரிஞ்சுது. நான் தான் அவரை அப்ளை செய்ய சொன்னேன். அவரின் தகுதிக்கு அந்த வேலை ஏத்தது தான்.

அவர் வேலைக்குத் செலக்ட் ஆனார்.

கொஞ்ச காலம் பிரச்சினை இல்லாம போய்க்கிட்டு இருந்துச்சு. ஷ்ரவன் வெளிநாடு போயிருந்த நேரத்துல சுதா அந்த நிறுவனத்தில் பொறுப்புக்கு வந்தா. இவரைக் கண்டதும் அவளுக்கு பொறுக்கலை. தவறு செய்த உணர்ச்சி அவளை உறுத்திக்கிட்டே இருந்துச்சு.
இவர் மேலே சுதா புகார்களை அடுக்கத் தொடங்கினா. அவகிட்ட தவறான முறையில் நடப்பதாய் கூட புகார் செய்து இவரை நிறுவனத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்துட்டா…அவருக்கு கருப்பு குறி (black mark) உண்டாச்சு, எந்த நிறுவனத்திலேயும் வேலை கிடைக்க வில்லை. மன உளைச்சலுக்கு ஆளானாரு. பல நாளா சாப்பிடவேயில்லை.

நான் அந்நேரம் கன்சீவ் (conceive) ஆனேன்.அந்த நேரம் தான் தற்கொலை முயற்சி பண்ணாரு.எனக்கு அபார்ஷன் கூட ஆகிருச்சு. நான் கர்ப்பமானது கூட அவருக்கு தெரியாது”

வலியுடன் மேற்கண்டதையெல்லாம் மாதவி கூறினாள்.

இவ்வளவு நேரம் பொறுமையாய்க் கேட்டுக் கொண்டிருந்த சதுரின் கண்களிலிருந்து அவனை அறியாமல் ஓர் துளிக் கண்ணீர் வழிந்தது. சிறிது நேரம் கேள்வி கேட்காமல் இருக்குமாறு காவலரை அறிவுறுத்தினார்.

சில நிமிடங்கள் கடந்த பின் மாதவியே தன் கதையை தொடர்ந்தாள்.

“நான் அடைந்த வலிக்கு அளவே இல்லை. பழிவாங்க துடிச்சேன். பழிவாங்குவது ஒருபரிசுத்த உணர்வு என்று மகாபாரதத்திலேயே சொல்லலையா ? மேல் மருத்துவத்திற்கு அவரை பெங்களூர் அழைத்து செல்ல சொன்னாங்க. நான் மருத்துவரிடம் அவரை விமான நிலையம் கொண்டு போக சொன்னேன்.

நான் சுதா வீட்டிற்கு போனேன்.அவள் வீட்டிலிருந்த கத்தியை எடுத்தேன்.அவளை ஜஸ்ட் மிரட்டவே செஞ்சேன். சுதா அவ தன் பாதுகாப்புக்காக வைச்சிருந்த கைத் துப்பாக்கியைக் கொண்டு என்னை மிரட்டினா. நான் அவளை கீறப் போக அவள் கைகளில் ஓர் வெட்டுக் காயம் உண்டாச்சு.காலிங் பெல் சத்தம் கேட்கவே நான் பயந்து வீட்டின் பின்பக்கம் போயிட்டன். இது எல்லாதுக்கும் இடையில் சுதாவின் குரல்ல “நீ ஏன் இங்கு வந்தாய் ” என்று யாரைப் பாத்தோ சொல்ற மாறி இருந்ததுச்சு. பின் அந்த கத்தியைப் புதர்ல போட்டு விட்டு சுவரில் ஏறிக் குதிச்சேன்.தெரு ஓரம் ஆட்டோ இருந்ததுச்சு. அதில் ஏறி விமான நிலையம் போனேன். வழியில் காலணிகளை வாங்குனேன். ”
சந்தர்ப்பத்தால் தவறு செய்த மாதவியின் வரலாற்றை சதுர் கேட்டறிந்தார். அவருக்கு குழப்பம் ஏற்பட்டது.தவறு செய்தது மாதவியா சுதாவா என்று.

…..

பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“சார்,மாதவி தான் குற்றவாளியா ?”

“இல்லை , மாதவி குற்றவாளி இல்லை .”

“அடுத்து என்ன செய்ய திட்டமிட்டுள்ளீர்கள் ?”

“மாதவியின் கணவருக்கு நாளை ஆபரேஷன் நடைபெற உள்ளதால் மாதவியுடன் இரு காவலர்கள் வைத்து விட்டு வந்தோம். ஆபரேஷன் முடிந்தவுடன் அவர் காவலில் வைக்கப்படுவார்”.

“எனி இம்ப்புருமென்ட்ஸ் ஆன் தி கேஸ்?”

“எந்த தடயங்களும் இந்நேரம் வெளியிடுவது சரியில்லை என்று நான் நினைக்கிறேன். குற்றவாளி நாளை அதை வைத்து தப்பிக்கலாம் அல்லவா ? ”

“உண்மையில நீங்க எதாவது கண்டு பிடிச்சிருக்கீன்களா இல்லையா ? இல்லை வழக்கம் போல காவல் துறை தன் கடமையை செய்யும் அப்படின்னு சொல்லி சமாளிக்காதீங்க .”

சதுர் கண்களில் கோபம் நாட்டியமாடியது.

“சார் நீங்க இங்க வாங்க , கேள்வி கேக்கறது ஈஸி என்பதாலே எது வேணுமானாலும் கேட்கலாம் என்று இல்லை.உங்க பத்திரிக்கையில தானே நேற்று ஹாட் நியூஸ் அப்படின்னு இந்த நடிகருக்கும் அந்த நடிகைக்கும் சம்மநதம் னு முதல் பக்கம் அச்சடிச்சது. உங்களுக்கு முதலில் தொழில் தர்மம் ஒன்று உண்டா ?” சுட்டெரித்தார் சதுர்.

“நீங்க வழக்கை  திசை திருப்ப பாக்குறீங்க ”

“ஆமா யா எதுக்கெடுத்தாலும் இந்த இரண்டு வரிகளை சொல்லிடுங்க. நாங்களும் மனித ஜென்மங்கள் தானே கொஞ்சம் பொறுமை வேண்டாமா எங்களிடத்தில் காட்ட ?”

“இன்னும் இரண்டு நாட்களில் குற்றவாளியுடன் உங்களை சந்திக்கிறேன் ”

சொல்லிக் கிளம்பிவிட்டார் சதுர் நாத்.

மர்மம் தொடரும்..

 

(படியுங்கள் ) அத்தியாயம் 9

மாலை மர்மங்கள் எங்கள் பிரத்தியேக குற்ற நாவல் தொடர். எழுதியோர் :  சுவாதி மோகன் , அனிருத் ரமேஷ் (ஆங்கிலம்) மற்றும் அருண் பாலாஜி , க. பவித்ரா , கிஷோர்  (தமிழ்)