மாலை மர்மங்கள் – அத்தியாயம் 9

 

 

இதுவரை:


தொழிலதிபர் ஷ்ரவனின் மனைவி சுதா கொல்லப்படுகிறார்.துப்பறிவாளர் சதுர் நாத்திடம் வழக்கு வழங்கப்படுகிறது.ஷ்ரவனின் குடும்பத்தினரை அவர் விசாரிக்கிறார்.சுதா இல்லத்தின் வாட்ச் மேனை விசாரிக்கையில் ஷ்ரவனின் சகோதரியான மைதிலி மீதான சந்தேகம் அதிகரிக்கிறது.சதுர் , சுதாவின் வீட்டில் ரத்தக் கறை படிந்த கத்தியும் மற்றும் சுதா ஓர் ஆடவனுடன் இருக்கும் பழைய புகைப்படமும் கிடைக்கின்றன.இது குறித்து ஷ்ரவனிடம் விசாரிக்க செல்கையில் அவன் தோழன் செம்பியன் மூலமாய் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைக்கின்றன.தன் வீட்டிற்கு திரும்பிய சதுர் நாத்திற்கு, அவர் மனைவி காயத்ரி சுதாவின் நண்பர்களிடம் பேசுமாறு ஆலோசனை வழங்கினாள்.ஓர் ஆதாரத்துடன் கொலையாளிக்கு மிக அருகே இருப்பதாய் சதுர் உணர்கிறான்..


இனி…

 


அத்தியாயம் 9:இன்னும் 40 நிமிடங்களில் விமானம் தரையிறங்கிவிடும் நிலையில்,சதுர் தன் இருக்கையில் சாய்ந்தபடி ஆழ்ந்த யோசனையில் இருந்தார். ஆசை மனைவியை இந்நிலையில் தனியே விட்டுவந்த கவலை ஒருபுறம் இருக்க அவர் நடத்திய ரகசிய சோதனையைப் பற்றி சதுர் நினைத்துக் கொண்டிருந்தார்.
எவ்வித இலக்கும் இல்லாமல் பெங்களூர் செல்வது முட்டாள்தனம் என்றுணர்ந்த சதுர் , தன் பாதையை மாற்றினார். முதலில் ஸ்ரீநிவாஸின் வீட்டில் ஒரு ரகசிய சோதனை போட முடிவெடுத்தார். முற்றம் பக்கமிருந்த மதில் சுவர் சற்று உயரம் குறைவாக இருக்கவே தன் கல்லூரித் தடகள வித்தைகளைப் பயன்படுத்தி அதன் மீது ஏறினார். அக்கம் பக்கம் சத்தம் கேட்காதபடி திருட்டுப் பூனை போல் உள்ளே நுழைந்தார். களவையும் கற்று மறந்திருப்பார் போலும்.
ஒரு படுக்கையறை வசதி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அது. உள்ளே நுழைந்ததும் அது ஒருவருக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்று காட்டும் வகையில் ஸ்ரீநிவாஸின் திருமணப் புகைப்படம் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அங்கிருந்த அலமாரியில் தேடி அவர்களின் திருமணச் சான்றிதழைக் கண்டெடுத்தார். அவள் பெயர் மாதவி. ” என்ன ஒரு பெயர் பொருத்தம்” சிரித்தபடி மறுபடியும் தேடத் தொடங்கினார். அப்போது அவர் கண்கள் அங்கிருந்த மருந்து ரசீதுகள் பக்கம் திரும்பின. அவ்வளவு நிறைய ரசீதுகள் இருந்ததால் சதுர் மனதில் சந்தேகம் குடி கொண்டது.”ஜானகி மருத்தவமனையா ” தனக்குத்தானே முனுமுனுத்தார்.
அடுத்த நிமிடமே அந்த மருத்துவமனை நோக்கி தன் யமஹாவில் பறந்தார் துப்பறியும் துப்பாக்கி சதுர் நாத்.
“ஸ்ரீநிவாஸா ? அவரைப் பற்றி நீங்க ஏன் கேக்குறிங்க ?”
“நான் ஒரு கொலைவழக்கை துப்பறிய நியமிக்கப்பட்டவன் (எப்போது முடியுமோ என்று சலித்தவாறு கூறினார். மனைவியைப் பிரிய மனமில்லை போலும்). அது தொடர்பாக எனக்கு ஸ்ரீநிவாஸ் பற்றி சில தகவல்கள் வேண்டும்.நீங்கள் தானே அவருக்கு மருத்துவம் பார்த்தவர் ?”
தன் தாடியைத் தடவியபடி “அவர் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை முயற்சி செய்து இப்பொது கோமாவில் (coma) உயிருக்கு ஆபத்தான நிலையில இருக்கிறாரு. இங்கு போதுமான வசதிகள் இல்லாததால அவர பெங்களூர் மணிப்பால் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்துட்டோம்.”
“அப்படியா ! எப்போது மாற்றபட்டார் ?”
” அது வந்து ரெண்டு நாள் முன்னாடி. மே 23 .”
ஒருவழியாக தடயங்கள் ஒன்றுசேர கொலையாளியை நெருங்கும் ஆவலை உணர்ந்தார் சதுர் நாத்.
” மாதவி ” குரலைக் கட்டுப்படுத்த முடியாமல் சதுர் கத்த ஒரு நிமிடம் அந்த மருத்துவர் நடுக்கிவிட்டார். சுதாரித்த சதுர், ” ம்ம்…மாதவி… அவரும் பெங்களூர் சென்றார்களா ?” சிரித்தபடியே கேட்டார்.
அவர் நடுங்கியவிதம் நினைத்து விமானத்திலும் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தார் சதுர். அருகிலிருந்த நவீன யுவதி (modern girl) அவரை அசிங்கமாகப் பார்க்க வாயை மூடிக்கொண்டார். வந்து இறங்கியதும் முதல் வேலையாக அந்த மருத்துவமனைக்குச் செல்ல கால் டாக்சி (call taxi) பிடித்தார். “திரு.ஸ்ரீநிவாஸ் ” என்று வரவேற்பறையில் கேட்க அவர்கள் ஸ்பெஷல் வார்டு (special ward) 13-க்கு செல்லும் படி வழிகாட்டினர்.
அங்கு சென்ற அவர் மெதுவாக கதவைத் தட்டினார். கதவு திறக்கும் அறிகுறியே இல்லை. மறுமுறை தட்டினார்.இப்போது மெல்லத் திறந்தது கதவு. “என்ன வேணும்” புகைப்படத்தில் கண்ட அதே பெண் கேட்டாள். சுதா வயது தான் இருக்கும் அவளுக்கும். அழுதழுது அவள் கண்கள் வீங்கியிருந்தன.
” மாதவி…நீங்கள் தானே ?”
“ஆமாம். நீங்க? “சோர்ந்த குரலில் கேட்டாள்.
” என் பெயர் சதுர் நாத். சுதாவின் கொலை வழக்கை விசாரணை செய்ய நியமிக்கப்பட்டவன்.”
“என்ன !” ஒரு நிமிடம் ஒன்றும் விளங்காதது போல் சிலையானாள். அவள் நிலைகண்டு சதுர் வருத்தம் கொள்ளவில்லை. கொலைக்காரியைப் பார்ப்பது போல் பார்த்தார்.
” விசாரணைக்காக நீங்கள் மெட்ராஸ் வரவேண்டும். ”
” உங்க விசாரணைக்கு நா முழு ஒத்துழைப்பு தரேன் .ஆனா இந்த நிலைமையில அவர விட்டுட்டு என்னால வரமுடியாது.”
” சுதாவைக் கொன்றதே நீங்கள் தானே” என்று அவர் கேட்க “இல்லை” என்று கத்தினாள் மாதவி. பின்பு அமைதியானவள் ” நா சொல்றத நம்புங்க . நா அவளக் கொல்லல. ” என்று அழாத குறையாக மன்றாடினாள்.
“மே 23. டாக்டர்.காளிதாஸ் உங்கள் கணவரை விமான நிலையம் அழைத்து வந்தாரே. அப்போது ஒற்றைக்கை கொண்ட ஆட்டோகாரனின் வண்டியில் எங்கிருந்தோ வந்து இறங்கினீர்களே . ஞாபகம் இருக்கிறதா ? ” . அவள் விசித்திரமாகப் பார்க்க,

” ஆம் உங்கள் மருத்துவரிடம் பேசிவிட்டுத்தான் வந்திருக்கிறேன். உண்மையை மறைக்காமல் சொல்லுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது ” சற்று மிரட்டும் தோரணையில் கூறினார்.
அவள் கண்ணீரை அடக்கியவாறு ஆடிப்போய் நின்றாள்.
” விமான நிலையம் வரும் முன் எங்கு சென்றீர்கள்? ”
” அது வந்து…கோவிலுக்குப் போயிருந்தேன்.” சதுரின் கண்களைப் பார்க்க முடியாதவளாய் நின்றாள்.
” ஓ…அப்படியா…இந்த காலணிகள் ஞாபகம் உள்ளதா ? ”
“இது என்னோடது இல்ல ” என்று தலையாட்டி மறுக்க ,

” நீங்க வந்த ஆட்டோக்காரனிடம் ஏற்கனவே பேசிவிட்டேன். உங்கள் வீட்டில் சோதனை செய்ததில் உங்களின் புகைப்படம் கிடைத்த உடனே உங்களைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன் .புகைப்படம் வைத்து உங்கள் வீட்டின் பக்கம் உள்ள ஆட்டோ ஸ்டான்டில் விசாரிக்கையில் அந்த ஒற்றைக் கை ஆட்டோ ஓட்டுநர் உங்கள் முகத்தை அடையாளம் கண்டார். இரண்டு நாட்கள் முன்னால் தான் என்பதால் உங்கள் முகம் அவருக்கு நன்கு ஞாபகம் இருந்தது. நீங்கள் எங்கே ஏறினீர்கள் என்பதைக் கூட அவர் துல்லியமாகக் கூறிவிட்டார். அந்த இடம் சுதா வீட்டின் பக்கத்து வீதி. என்ன திருமதி.மாதவி நான் சொல்வது சரிதானே? ”
அவள் முழிக்க “இன்னொரு விஷயம்…எனக்குத் தெரிந்தவரை அங்கே கோவிலெல்லாம் இல்லை…ஒரேயொரு சர்ச்சு (church) மட்டும் தான். ஒருவேளை மாதவி என்ற தங்கள் பெயரை மடோனா என்று மாற்றிவிட்டீரோ ? ” நக்கலாக அவர் கேட்க பேசாமடந்தையாக மாறினாள் மாதவி.
” நீங்கள் இப்படி அமைதியாக இருப்பதால் உங்களுக்கு எந்த நன்மையும் வரப்போவதில்லை. ” சதுர் கூற “நா அவளக் கொல்லல சார். அவ ஒரு துரோகி. எங்களோட இந்த நிலமைக்கு அவ தான் காரணம். நா அன்னைக்கு கத்திய வச்சு மிரட்ட மட்டும் தான் செஞ்சேன். எதிர்பாராம அப்ப அவ வாசல் மணி (door bell) அடிக்க நா அங்கிருந்து ஓடிட்டேன்.”
கண்கள் வெளியே பிதுங்க ஆர்வத்துடன், ” என்ன சொல்கிறீர்கள்….வாசலில் இருந்தது யார் ? ” என்று கேள்வியெழுப்பினார் சதுர் நாத்.
மர்மம் தொடரும்…..
(படியுங்கள் )

அத்தியாயம் 8

 அத்தியாயம் 10

 

மாலை மர்மங்கள் எங்கள் பிரத்தியேக குற்ற நாவல் தொடர். எழுதியோர் :  சுவாதி மோகன் , அனிருத் ரமேஷ் (ஆங்கிலம்) மற்றும் அருண் பாலாஜி , க. பவித்ரா , கிஷோர்  (தமிழ்)