மாலை மர்மங்கள் – அத்தியாயம் 6


இதுவரை :

தொழிலதிபர் ஷ்ரவனின் மனைவி சுதா சுட்டுக் கொல்லப்பட்டார்.வழக்கு துப்பறியும் அதிகாரி சதுர் கைகளுக்குச் சென்றது . அவர் ஷ்ரவனிடமும் அவன் குடும்பத்தினரான மைதிலி, விநாயக், நந்தினி ஆகியோரிடமும் தன் விசாரணையை நடத்தினார். அடுத்து சுதா இல்லத்தின் காவலாளியை விசாரிக்க , மைதிலி மீதான சந்தேகம் அதிகரிக்கிறது. சுதா வீட்டின் பின்புரம் சென்ற சதுரின் கண்களுக்கு எதிர்பாரா பொருளொன்று தெரிகிறது…

அத்தியாயம் 6:

புதர்களுக்கிடையே தாழ்வானக் குழி ஒன்றிருப்பதைக் கண்டான் சதுர். அந்தக் குழி முழுவதும் காய்கறி குப்பைகளும் மீந்துபோன தின்பண்டங்களுமே நிறைந்திருந்தன. “முன்னோ மகாராணியின் மாடமாளிகை, பின்னாலோ அந்த ராணி தின்று வீசிய குப்பைக்கிடங்கு” என்று சதுர் நகைத்த மாத்திரத்தில் பளபளக்கும் ஏதோவொன்று அவர் கண்களில் தென்பட்டது.

 

கீழே குனிந்து பார்த்தார். கூரிய கத்தி அது. கத்தியின் முனையில் காய்ந்த இரத்தம் ஒட்டிக்கொண்டிருந்தது. அதைக் கைக்குட்டை உதவியுடன் வெளியே எடுத்த சதுர்நாத் அவருடன் இருந்த அதிகாரியிடம் தந்து தடையவியல் பரிசோதனைக்கு அனுப்பச் சொன்னார். அதிலிருப்பது சுதாவின் இரத்தமாக இருந்தால் அதிலிருக்கும் ரேகைகளை வைத்துக் கொலையாளியை நெருங்கிவிடலாம் என்பதே சதுரின் யூகமாக இருந்தது.


வாசல் வரை சென்ற அவருக்கு ஏதோ யோசனை தோன்ற சுதாவின் அறைக்குச் சென்றார்.’குப்பைக் கிடங்கே இப்படியோரு தடையத்தைத் தருகிறதென்றால் அந்தபுரத்தில் என்னென்ன மர்மங்கள் ஒளிந்துகிடக்கும்’ நினைத்துக் கொண்டார்.”டேய் சதுர். வர வர உன் மூளை உருகிபோன பல்பு போல மாறிவிட்டது. மெத்தனமாக இருந்துவிடாதே டா” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு அவள் அறைக்கதவைத் திறந்தார் சதுர்.

முதல் பார்வையில் நூலகம் போலக் காட்சியளித்தது அந்த அறை. ‘இவ்வளவு புத்தகங்களையும் கொள்ளையடிக்கக் கூட இந்த கொலை நடந்திருக்கலாம். மூட்டை கட்டி விற்றால் சில பல ஆயிரங்கள் தேறும்’ என்று நினைத்தவாறு அந்த அறையை நோட்டமிட்டார் சதுர். “அந்தபுரத்து மகராணி…ஓஹொ… ஓஹொ” என்று பாடிக்கொண்டே ரம்பா போல் இடுப்பை வளைக்க, கால் இடறியது தான் மிச்சம். அலமாரியைப் பிடித்து நிற்க முயற்சி செய்து புத்தகங்களையும் தனக்குத் துணையாக விழ வைத்தார். இந்த சம்பவம் அவருக்கு மற்றுமொரு தடையத்தைத் தருமென்று அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

கீழே விழுந்த புத்தகங்களை மறுபடியும் அலமாரியில் அடுக்கினார். அப்போது எக்கோஸ் ஆப் த பாஸ்ட் (Echoes of the past) என்ற ஒரு புத்தகத்தில் மட்டும் புகைப்படமொன்று நீட்டிக்கொண்டிருப்பதைக் கண்டார். சலித்துக்கொண்டே அதை எடுத்த அவர், தன் காலை உதறிவிட்டு வெளியேறத் துவங்கினார்.

ஆணையர் அவரைக் கண்ட மறுகணம் “என்ன சதுர்…ஏதேனும் தடையம் கிடைத்ததா ?”என்று ஆவலுடன் கேட்டார்.

“ஆம். அது தொடர்பாகத்தான் உங்களைக் காண….”, அவர் முடிப்பதற்குள் “உள்ளே வரலாமா ஐயா” ஏட்டு ஏகாம்பரம் உச்சஸ்தாயியில் அனுமதி கேட்டார்.

“வாங்க சார்” என்று சிரிப்பை அடக்கியவாறு வெரப்பாக அழைத்த ஆணையரிடம் பிரேத பரிசோதனை ஆய்வுக் கோப்பை (post mortem report file) நீட்டினார் ஏகாம்பரம். சதுருக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு நடையைக் கட்டினார்.

கோப்பையைப் புரட்டிய ஆணையர், “இடது முழங்கையில் ஒரு வெட்டு. ஆனால் இரத்தம் அதிகம் வரவில்லை. வெட்டும் கொலையும் ஏறத்தாழ ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். அடடா…இதை நான் பார்க்கவில்லையே. இது தற்கொலையாகக் கூட இருக்கலாம்.”

“ஏன்…ஏன் அப்படி கூறுகிறீர்கள் ? “

“சுதா மன அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டிருக்கிறார். இந்த மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடும் போது, மாயைகள் ஏற்பட்டு சுயநினைவை இழக்கும் நிலையை உருவாக்கும். பிறகென்ன… தற்கொலைதானே. ”

“வழக்கை முடிக்கிறேனென்று நீதியைக் கொன்றுவிடாதீர்கள். கடைசி பந்தில் கூட சிக்சர் விழலாம். நான் கண்டறிந்த தடையங்கள் பற்றி முதலில் கேளுங்கள். பின்பு முடிவுக்கு வரலாம்.”

சதுர் சுதா இல்லத்திற்குப் பின்னால் கிடைத்த கத்தி பற்றி கூறினார்.

“அப்படி போடுங்க சதுர். நம் காவல்துறையில் வாங்கும் சம்பளத்திற்கு மேல் வேலை செய்பவர் நீங்கள் மட்டும் தான்.”

எதிர்பாராப் புகழைக் கேட்ட சதுர் நெளிந்துக்கொண்டே “உங்கள் வாயைப் பிளக்கவைக்கும் அளவுக்கு மற்றுமொரு துப்பும் சிக்கியது.”

“கண்ணனின் லீலைகளைக் கேள்விபட்டிருப்பீர்கள். ராதையின் லீலையைக் கண்டதுண்டோ ?”. அவர் கண்டெடுத்த புகைப்படத்தைக் காட்டினார்.

அதில் சுதா சற்று இளமையாக இருந்தாள். ஜீன்ஸ், டீ-ஷர்ட் அணிந்த அவளைக் கட்டி அணைத்தபடி போஸ் தந்துகொண்டிருந்தான் அந்த அழகான இளைஞன். அவன் கண்டிப்பாக ஷ்ரவன் கிடையாது.

“யார் இவன் ?”

“இவன் யாரென்பதை இனிமேல் தான் கண்டுபிடிக்க வேண்டும்.”

“இவர்களின் நெருக்கம் எனக்குச் சந்தேகமாகப் படுகின்றது. உங்கள் அடுத்தத் திட்டம் என்ன சதுர்?”

“வேறென்ன…பரலோகம் சென்ற பத்தினியின் கணவனிடம் பதில் கேட்கும் படலம் தான்”, நக்கலாகச் சொல்லிவிட்டு வெளியேறினார் சதுர்.

ஷ்ரவனின் அலுவலகம் சென்ற சதுருக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டும்தான். ஷ்ரவன் ஒரு முக்கியமான தொழிலதிபர்கள் சந்திப்பிற்குச் சென்றிருப்பதாக அந்த வரவேற்பறை யுவதி கூறினாள்.

விழா நடப்பதாக அவள் கூறிய முகவரிக்குச் சென்றான். வாசலில் “செம்பியன் எண்டர்பிரைசஸ் ” பெயர்ப்பலகையைக் கண்டான். உள்ளே சென்ற அவன் இயந்திர மனிதர்கள் போல் வேலையில் லயித்திருந்த கோட்டுப்போட்ட பணியாட்களைக் கண்டான். அவர்கள் சதுரிடம் மாடியில் குதூகல விழா (party) நடப்பதாகக் கைக்காட்டினர். லிப்ட் வாசலில் பழுதடைந்துள்ளது (out of order) என்ற வாசகத்தைப் பார்த்த சதுர் நொந்துகொண்டே படிக்கட்டுகள் நோக்கி நடந்தார்.

‘மறுபடியும் பார்ட்டி-யா ! மனைவி இறந்த துக்கம் கொஞ்சம் கூட இல்லையே. பேசுவது மட்டும் தேவதாஸ் கணக்காகப் பேசுகிறான் ; ஆனால் தாடியும் இல்லை , கண்ணீரும் இல்லை. என்ன பணக்காரர்களோ ? இவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்பதையெல்லாம் அழிந்துபோன வரலாறாகவே பார்ப்பார்களோ ? ஒருத்தியையே நினைத்துக் கொண்டு, அவளுக்காகவே வாழும் சுகத்தை அறியாத பேதைகள் ‘ என்று அவர் நினைக்கும் போதே எங்கிருநந்தோ ஒரு புன்னகை அவர் இதழ்களில் ஓட்டிக்கொண்டு விட்டுச்செல்ல அடம்பிடித்தது.

கஷ்டபட்டு நடந்து மாடி சென்ற சதுருக்குத் தக்க பலன் காத்துக்கொண்டிருந்தது. ஷ்ரவனைத் தேடும் பணி இவ்வளவு எளிதில் முடியும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.கூட்டத்தின் நடுவில் மீசையை முறுக்கிக் கொண்டு காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தான் ஷ்ரவன். சற்று அருகில் சென்ற அவர் விவாதமே சுதா பற்றிதான் என்பதைக் கண்டார். ‘ பெண்களைப் பாஞ்சாலியாக்குவதே இந்த ஆண்களின் வேலை. இது எங்கு போய் முடியுமோ ? ‘ என்று நினைத்தவாறு கூட்டத்தோடு கூட்டமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார் சதுர்.
(படியுங்கள் )

அத்தியாயம் 7


மாலை மர்மங்கள் எங்கள் பிரத்தியேக குற்ற நாவல் தொடர். எழுதியோர் :  சுவாதி மோகன் , அனிருத் ரமேஷ் (ஆங்கிலம்) மற்றும் அருண் பாலாஜி , க. பவித்ரா , கிஷோர்  (தமிழ்)