மாலை மர்மங்கள் – அத்தியாயம் 3

அத்தியாயம் 3:

“என்ன இது?”, அதிர்ந்துபோய் கேட்ட மைதிலியிடம்,

“இது உங்களுடையதா ?” என்று எதிர்கேள்வி கேட்டார் சதுர்.

“இல்லை”

“இது உங்கள்…”, அவர் முடிப்பதற்குள் “

இது என்னுடையதல்ல.எடுத்துக் கொண்டு போங்க “சிடுசிடுத்தாள் மைதிலி.

“நேற்று எங்கே இருந்தீர்கள் ?” “நேற்று…முழுக்க வீட்டில் தான் இருந்தேன்.” ஏனோ இதைச் சொல்லும் போது சதுரின் கண்களை அவள் பார்க்கவில்லை.

“ம்ம்ம்…குற்றவாளியைக்(அழுத்தமாகச் சொன்னார் )கண்டுபிடிக்கும் வரை உங்கள் முழுமையான ஒத்துழைப்பு வேண்டும்.சென்று வருகிறேன்.”எழுந்தார் சதுர் நாத்.

அவளுடைய நாத்தனார்கள் அவளைக் கேவலமாகப் பார்க்க, அழுதுக் கொண்டே ஷ்ரவனுக்குப் போன் போட்டாள் மைதிலி. ஷ்ரவனைத் தேடும் வேலை மிச்சமானது என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே தன் யமஹாவில் அமர்ந்தார் சதுர்.

அடுத்து அவர் சென்றது விநாயக்கின் வீட்டிற்கு .மைதிலியின் வீட்டிற்கு நேர் எதிராக அது காட்சியளித்தது. அவர்களின் வறுமையை அந்த வீடே காட்டிக்கொடுத்தது.தான் அங்கு வண்டி நிறுத்துவதைக் கண்டதும், வாசலில் காந்தத் துண்டுகளுடன் மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தப் பெண் பிள்ளைகள் இருவரும் “அம்மா! அம்மா! ரஜினிகாந்த் மாதிரி ஸ்டைலா ஒருத்தர் நம்ம வீட்டுக்கு வந்திருக்கிறாரு” என்று தங்கள் தாயை அழைத்து வந்தனர்.

அழகான அவள் வேலைப் பளுவால் தன் வயதை விட முதுமையானவளாகக் காட்சியளித்தாள்.வெளியே வந்த அவள் வாட்டசாட்டமாக தன் வீட்டு வாசலில் நின்ற இளைஞனைக் கண்டாள்.பொன் நிறத்தில் இருந்த அவன் கருப்பு சட்டையும் பழுப்பு ஜெர்கினும் அணிந்திருந்தான். கையில் தலைக்கவசமும் கண்களில் கருப்புக்கண்ணாடியும் அணிந்து கொஞ்சம் ஸ்டைலாகத் தான் இருந்தான்.

“நீங்கள் தானே நந்தினி விநாயக் ?”

“ஆம்.நீங்கள் யார்?என்ன வேண்டும் உங்களுக்கு?”

அவள் கேட்டத் தோரனையைப் பார்த்து ஒருகணம் திகைத்தார் சதுர்.வறுமையிலும் மக்கள் தம் உரிமைகளை விட்டுக் கொடுப்பதில்லை என்பதை நினைத்துப் பெருமிதம் கொண்டார்.

“நான் துப்பறியும் அதிகாரி சதுர் நாத்.சுதா பற்றிக் கொஞ்சம் பேச வேண்டும் “

“என்ன , இந்தக் காலையிலேயே விசாரணையா ? “

“நாங்கள் நேரம் காலமெல்லாம் பார்த்தால் ஒரு வழக்கை முடிப்பதற்குள் கொலையாளி இன்னும் நூறு பேரையாவது கொன்றுவிடுவான்.தாமதிக்கப்படும் நீதிக்கும் அநீதிக்கும் வித்தியாசம் ஒன்றும் பெரிதில்லையே”

“சரி.உள்ளே வாங்க. ” என்று அழைத்தாள் நந்தினி.

“சுதாவுடன் உங்கள் உறவு எப்படி? ” தனது முதல் கேள்வியைக் கேட்டார் சதுர்.

“எனக்கு அவளைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் தெரியாது.திருமணமான ஒரு மாதத்திலேயே அவர்கள் தனியாக வாழ விரும்பியதால் இங்கே வந்துவிட்டோம்.”

“சரி. விநாயக்கைக் கூப்பிட முடியுமா?”

“அவர்…” என்று அவள் பேசுவதற்குள் சமையலறையில் பாத்திரங்கள் விழும் சத்தம் கேட்டு இருவரும் சென்றுப் பார்த்தனர். சொட்டைத் தலையும் சுருக்கங்களுமாகக் குடிபோதையில் முதியவர் ஒருவர் தள்ளாடுவதைக் கண்டார் சதுர். சுவற்றில் சாய்ந்துகொண்டு நிற்கவே சிரமப்பட்ட அவரை தன் மீது சாய்த்தவாறு பக்கத்திலிருந்தப் படுக்கையறையில் படுக்க வைத்தாள் நந்தினி. அவன் இருமல் சத்தம் வானைப் பிளக்கும் இடி போல் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருந்தது.

அவன் மிகவும் முதிர்ந்தவன் போல் இருந்ததால், அவன் விநாயக்காக இருக்க மாட்டான் என நினைத்து, “யார் அவர்?” என்று விசாரித்தார் சதுர்.

“அவர் தான் என் கணவர் விநாயக்”, கூறிக்கொண்டே அவனுக்கு இருமல் மருந்து எடுத்துச் சென்றாள் நந்தினி. மருந்து சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவன் இருமல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. சிறிது நேரத்தில் முழுவதுமாக நின்றுவிட்டது. கண்ணசந்திருப்பான் என்று நினைத்து முடிப்பதற்குள் எதிரே இருந்த சுவற்றின் மேல் அவர் கவனம் திரும்பியது.

அறையை விட்டு வெளியே வந்த நந்தினி , அவர் எதிரே தொங்கிக் கொண்டிருக்கும் துணிகளைக் கண்கொட்டாமல் பார்ப்பதைக் கண்டாள் .அவள் பார்ப்பதைக் கண்டுகொண்டு சட்டென்று திரும்பினார்.

“அங்கே இரத்தக் கறை இருக்கிறதே. அது யாருடையது?”என்று கேட்டுவிட்டு நந்தினியின் முகத்தைப் படிக்க முயற்சி செய்தார் துப்பறியும் கில்லி சதுர் நாத்.

(படியுங்கள் )

அத்தியாயம் 2

அத்தியாயம் 4

 

மாலை மர்மங்கள் எங்கள் பிரத்தியேக குற்ற நாவல் தொடர். எழுதியோர் :  சுவாதி மோகன் , அனிருத் ரமேஷ் (ஆங்கிலம்) மற்றும் அருண் பாலாஜி , க. பவித்ரா , கிஷோர்  (தமிழ்)