மாலை மர்மங்கள் – அத்தியாயம் 2

 

அத்தியாயம் 2: 

“வழக்கு என்னவாயிற்று? “,என்று ஆணையர் கேட்க ,பொழுது விடிவதற்குள் அவசரமாக நம்மை வரவழைத்துள்ளார் என்றால் இது ஷ்ரவனின் செல்வாக்கு செய்த வேலையாகத் தான் இருக்கும் என்று யோசனையில் இருந்தார் துப்பறியும் கில்லி சதுர்.

ஆணையரின் பார்வை தன் மேல் விழுவதைக் கண்ட சதுர், “இந்த வழக்கு மர்மமானதாக உள்ளது. கொலையாளி சாமர்த்தியாமாக இதைச் செய்திருக்கிறார்.காலணிகள் தவிர வேறு தடயம் ஏதும் சிக்கவில்லை “என்றார் .

“சரி சதுர், அந்தத் துப்பாக்கி யாரோடது ?”

“சுதாவின் துப்பாக்கி தான்”

“பின் எப்படி கொலை என்று…”அவர் முடிப்பதற்குள் அவர் துப்பாக்கியையே எடுத்து அவர் தலையில் வைத்தார் சதுர்.”இப்போது உங்களை நான் சுட்டால், அது கொலையா? தற்கொலையா? “

ஆணையர் திகைத்துப்போனார் .சதுரோ நிதானமாக ஒன்றும் நடக்காதது போல் அவரைப் பார்த்துச் சிரித்தார்.”நீங்கள் ஒரு புரியாத புதிர் தான் சதுர்.உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் இருக்கிறதா சதுர்?”

“அவளொரு அனாதை. அதனால் என் சந்தேகமெல்லாம் அவள் புகுந்தவீட்டுச் சொந்தங்கள் மீதுதான்.அவள் கணவன் ஷ்ரவன், அவள் நாத்தனார் மைதிலி, ஷ்ரவனின் அண்ணன் விநாயக் ,விநாயக் மனைவி நந்தினி.தொழில் எதிரிகள் கூட செய்திருக்கலாம்.நான் அவள் குடும்பத்தாரைத் தான் முதல் கட்டமாக விசாரிக்கப் போகிறேன்.”

“ஷ்ரவன் தான் வெளியூரில் இருந்தாரே. அவர் எப்படி? “

“அவர் யாரிடமாவது பணம் தந்து கொல்லச் சொல்லியிருக்கலாமே .என் சந்தேகப் பார்வையிலிருந்து யாராலும் தப்பமுடியாது. “

“மோப்ப நாய்கள் மூலம் எதாவது துப்பு கிடைத்ததா ?, சதுர் .”

“சுதாவின் கைவியர்வை பட்டதால் அந்தத் துப்பாக்கியால் சுட்டவரை மோப்பம் பிடிக்க இயலவில்லை. ஆனால் அந்தக் காலணிகளில் இருந்த வாசம் வைத்து விமான நிலையம் வரை மோப்ப நாய்கள் சென்றன. அன்று விமானம் ஏறிய பயணிகள் பட்டியலைப் பார்த்தோம்.சந்தேகப்படும்படி எவருமில்லை.”

ஆணையர் யோசித்தபடி மெல்ல தலையாட்டினார்.

” நாய்கள் வேண்டுமானால் ஏமாற்றலாம், நான் ஏமாற்றமாட்டேன். இனி இந்த வழக்கைப் பற்றி எது வேண்டுமென்றாலும் ஷ்ரவனிடம் என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள் . வருகிறேன்.” எழுந்தார் சதுர்.

வெளியே வந்த சதுர் தன் ஆர்.எக்ஸ்.100- இல் அமர்ந்தார். நிசப்தமான காலையில் உறும்பியபடி பறந்தது அவர் வண்டி மட்டுமல்ல அவர் மனவோட்டமும் தான்.

“நீங்கள் தானே மைதிலி ?”கதவைத் திறந்த பெண்ணிடம் கேட்டார் சதுர் அந்த அதிகாலையிலேயே விசாரிக்கச் சென்றுவிட்டார் சதுர்.

அவள் கொஞ்சம் குள்ளமாக இருந்தாலும் அழகாகத் தென்பட்டாள். தன் கல்லூரித் தோழனோடு ஓடிச் சென்று திருமணம் செய்துக்கொண்டவள்.இப்போது அவன் மைதிலியை தன் வீட்டில் தங்கவைத்து விட்டு வெளிநாட்டில் பணிபுரிகிறான் .

‘ஆம்’ என்றவாறு தலையசைத்தாள். அவள் நாத்தனார்கள் அவளை முறைக்கும் விதத்திலேயே அவள் படப்படப்பின் காரணத்தைப் புரிந்து கொண்டார் சதுர்.பெண் விடுதலை என்று என்னதான் கூறினாலும் சில பெண்களே அதற்குத் தடையாய் இருப்பதைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார் சதுர்.

அவள் சிவந்த கண்களைக் கண்ட சதுர் “அழுதுகொண்டிருந்திங்களா ?” என்று சந்தேகமாய் கேட்க , அவசரமாகத் திரும்பி தன் பருத்தி சேலையின் முந்தியில் கண்களைத் துடைத்த அவள், “இல்லை” என்றாள்.

“உங்கள் அண்ணியார் சுதாவுடன் நீங்கள் கொண்ட உறவு எப்படி ?”

“நன்றாகத் தான் இருந்தது.அவளை நான் என் தாயாகவே பார்த்தேன்”

“உங்கள் அண்ணன் ஷ்ரவன் எப்படி?”

“அவன் மிகவும் நல்லவன்.முதலில் நான் திருமணம் செய்துகொண்டது அவனுக்குப் பிடிக்கவில்லை.இருந்தாலும் எனக்காக அவன் நிறைய உதவிகள் செய்திருக்கிறான்”

“ம்ம்…சரி .இந்தக் காலணியை அணிந்துக் காட்டுங்கள்.”

அவள் பாதம் கச்சிதமாகப் பொருந்தியது.சதுர் அதிர்ந்தார். மைதிலியின் படப்படப்பிற்குப் பின்னால் வேறு காரணங்கள் ஏதேனும் இருக்குமோ என்று யோசிக்கத் தொடங்கினார் துப்பறியும் கில்லி சதுர்.

(படியுங்கள் )

 அத்தியாயம் 1

 அத்தியாயம் 3

மாலை மர்மங்கள் எங்கள் பிரத்தியேக குற்ற நாவல் தொடர். எழுதியோர் :  சுவாதி மோகன் , அனிருத் ரமேஷ் (ஆங்கிலம்) மற்றும் அருண் பாலாஜி , க. பவித்ரா , கிஷோர்  (தமிழ்)