தளபதி – திரைப்பட விமர்சனம்

“தளபதி” – இந்த சொல்லை பார்த்தவுடன் தங்கள் மனதுக்குள் பல எண்ணங்கள் எழலாம்.ஆனால் எனக்கோ, மணிரத்னம் இயக்கி ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டி ஆகியோர் நடித்த மாபெரும் வெற்றிப்படம் தான் மனதில் நிலை பெறுகிறது.

இந்த திரைக்காவியம் மகாபாரத பின்னணியில் நகர்கிறது.இன்றளவும் மகாபாரத கதையில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் எது என்று கேட்டால்,நம்மில் பலர் கர்ணன் என்போம்.அர்ச்சுனனுக்கு இணையான மாவீரன்,கடையெழு வள்ளல்கள் யாவரும் சேர்த்து வைத்தாற் போன்ற கொடை வள்ளல்,சூரியபுத்திரன் கர்ணன்.அத்தகைய வீரனின் பாத்திரத்தை ரஜினிகாந்த் ஏற்று நடித்திருப்பார்.அவரின் நடிப்பு திறனை வெளிப்படுத்திய படங்களில் இதுவும் ஒன்று.

 கதையில் யாருக்கும் பிடிக்காத தீயவன்,துரியோதனன்.அவன் செயல்கள் யாவும் தீமை நிறைந்தவை.அவன் செய்த ஒரே நல்ல காரியம் கர்ணனின் மீது அன்பு செலுத்தியதும்,அனைவரும் தேரோட்டி மகன் என்று கூறி கர்ணனை இழிவுபடுத்திய போது அவனை மதித்து எற்றுக் கொண்ட பண்பும் ஆகும்.இந்த துரியனின் வேடத்தை மம்மூட்டி சிறப்பாக நடித்துள்ளார்.

மணிரத்னம்,துரியனின் தீய குணத்தை விடுத்து அவன் கர்ணன் மீது செலுத்திய அன்பு அதை மட்டுமே கருவாய் அமைத்து இப்படத்தை இயக்கியது அவரின் தனிச்சிறப்பு.

இளையராஜாவின் இசை பற்றி கூறாமல் செல்ல இயலாது.பாடல்களில் தொடங்கி பின்னணி இசை முடிய இவரின் கைவண்ணம் மனதைக் கவர்கிறது.பின்னணி இசை மிகவும் சிறப்பாய் உள்ளது.

நிழற்படக் கருவியை(Camera) சந்தோஷ் சிவன் கையாண்டுள்ளார்.”காட்டுக் குயிலு” என தொடங்கும் பாடல் கதையில் வரும் இடத்தில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.போகி என்றால் என்ன ? பழையன கழிதல் தானே? அப்படியாக நடக்கும் போது வரும் புகை  அந்த பாடலில் அற்புதமாக அமைந்துள்ளது.இது அவரின் புகழ் பாடுகிறது.

 கர்ணன் குந்தியின் மகன் என போருக்கு முன்னர் தான் அறிகிறான்.இதை நினைவில் பதியுங்கள்.பானுமதியின் குழந்தை தடுப்பூசி போட்டுக் கொள்ள வித்யா அவர்களிடம் வருகிறது.அந்த மழலை ஒரு துணியை தன் தோள்களில் விரித்து வருகிறது.ஊசி போட்ட உடன் அந்த குழலிடம் வித்யா இதோ உன் துணியை எடுத்து கொள் என்கிறார்.அந்த குழந்தை சொல்கிறது இது தான், சூரியாவின் தாயார் அவன் பிறந்தவுடன் அவனை இத்துணியில் கட்டி ஒரு தொடர்வண்டியில் விட்டார் என்று.படம் பார்ப்பவர்களுக்கு ரஜினிகாந்த் தான் வித்யாவின் மகன் என்பது தெரியும்,ஆனால் அவ்விருவருக்கும் தெரிய வாய்ப்பில்லை.அந்த துணியை பார்த்தவுடன் வித்யா பொங்கி வரும் தாய் அன்பினால் அதை பிடித்து இழுப்பார்.இக்காட்சியில் ஊற்று போல் தாமாக பொங்கும் உணர்வுகளை அற்புதமாக நடித்திருப்பார்.

படத்தின் ஒரே குறை என்றால் அதன் சிறிய வசனங்கள் தான் மணிரத்னம் படம் என்றாலே அவர் அப்படி தான் அமைத்து விடுகிறார்.நட்பின் இலக்கணமாய் விளங்கும் அந்த வசனங்களோடே இதை முடித்துக் கொள்கிறேன்.

       “நட்பு னா என்ன னு தெரியுமா உனக்கு ” 

       “நண்பன் னா என்ன னு தெரியுமா உனக்கு”

       “சூரியா னா என்ன னு தெரியுமா உனக்கு”

விமர்சித்தவர் – அருண் பாலாஜி , முதலாம் ஆண்டு மாணவர்