உழவின் உயிர்க்கொலை – கவிதை

பொய்த்தது  ஐம்பூதம்
கைவிட்டது அரசாங்கம்
பிள்ளையென  வளர்த்தான் பயிரை,
புத்திரசோகம் தாக்கியது அவனை.
கரிசல்காடானது கழனி;
விரிசல் விட்டது விளைநிலம்;
காவிரி தென்பண்ணை பாலாறு -அவை
மணல் அள்ள மட்டும் தான் அது வரலாறு
அடகு வைத்த தாளி மூழ்கிப் போக;
வாங்கிய கடனோ கழுத்தை நெறிக்க ;
விளைநிலம் விலைநிலம் ஆனது.
எஞ்சிய உசுரும் உயிரை வாங்க;
வேண்டாமென துறந்தான்.
மண் வெட்டி சுமந்து சென்றான் அன்று -அவனை
வெட்டியான் சுமந்து செல்கிறான் இன்று.
மாயமான மழையை கண்டறிய
விண்ணோடு கலந்தானோ ?- அல்ல
நிலத்தடி நீரை தேட
பாரினுள் புதைந்தானோ ?
பித்தலாட்டம் செய்தவன் பணத்தோடு புரள;
விவசாயக் குடும்பம் பிணத்தோடு கதற;
இறக்குமதி அரிசி உண்ணும் என் பிள்ளைக்கு
உழவு இதுவென காட்ட இயலாத
பாவி ஆகி விடுவேனோ நான் ?
எழுதியவர்: ஜ. காவ்யா, முதலாம் ஆண்டு  Production Engineering மாணவி