செம்மொழியான தமிழ்மொழியாம்

வாழ்வில் நாம் பயன்படுத்தும் இன்றியமையாத கருவி,மொழி.மானுடன் ஒருவன் தான் எண்ணுவதை மற்றொருவனுக்கு எடுத்துரைக்க வந்ததே மொழி.இன்று,நம் இந்திய திருநாட்டில் 1652 மொழிகள,வெவ்வேறு மாநிலங்களில் உள்ள நமது சகோதர சகோதரிகளால் பேசப்பட்டு வருகின்றன.

நம் தாய் நாட்டின் மணிமகுடத்தில் உள்ள ஒளிவீசும் கற்களை போலே, 22 மொழிகள் அதிகாரப் பூர்வ மொழிகளாய் உள்ளன.

சரி,இனி அமுதினும் இனிய மொழியை பற்றி பார்க்கலாம்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி மனித நாகரிகத்தோடு இயைந்து வளர்ந்த பொன்மொழி.திருவள்ளுவர் தொடங்கி இன்று உள்ள மதன் கார்க்கி போன்ற எண்ணற்ற பாவலர்கள் பாட பயன்படுத்திய மொழி.உலகில் இனியது என எது இருந்தாலும் அதை விட பன்மடங்கு சுவையூட்டும் தித்திக்கும் மொழி.அதுவே,நம் தமிழ்மொழி.

இளங்கோவடிகள் முதன்முதலில் எழுதிய சிலப்பதிகாரம்,தமிழ் கூறும் நல்லுலகிற்கு அழியாத பொற்கிண்ணம்.கற்புடைய மகளிரின் ஒழுக்கத்தை உலகிற்கு காட்டியது.அரசியலில் பிழைப்போர்க்கு வரும் தண்டனையைக் காட்டி,அஞ்சி நடுங்க செய்தது.

புவியை ஆளும் வேந்தன் புலவர்க்கு கவரி வீசுவதும்,புலவர் ஒருவர் போரினை நிறுத்தி நாட்டை அழிவில் இருந்து காப்பாற்றியதும்,நாவுக்கரசர் பெருமானை கல்லில் கட்டி கடலில் விட்ட போது மிதக்க வைத்ததும் ஆகிய இவை அனைத்தும் தமிழின் ஆற்றலினால் நிகழ்ந்தது என்று சொன்னால் நம்ப முடியுமோ! ஆனால்,இவை யாவும் உண்மை.வரலாற்றை அலசி ஆராய்ந்தால் நான் கூறுவதன் நுட்பம் விளங்கும்.

எக்காலத்திற்கும் பயன்படுத்தக் கூடிய  திறன் உடைய மொழி. உடலில் உயிர் கூடி வரும் 247  எழுத்துகளும் கோடான கோடி சொற்களும் உடைய தலையாய மொழி,தமிழ்.சில மொழிகள் பேச்சு வழக்கிலிருந்து அழிந்து போன நிலையில்,அறிவியலும் பேசிய நுட்பமான மொழி,தமிழ்.

இத்தகு சிறப்பு வாய்ந்த மொழியை பேச நம்மவர்கள் தற்காலத்தில் எவ்வளவு தயக்கம் காட்டுகின்றனர்.வெட்கி தலை குனிகின்றனர்.இதை நினைக்கையில் மனம் வேதனை தீயில் எரிகிறது.

இது எதிலிருந்து தொடங்குகிறது என்றால், தாயை,’அம்மா’ என்று அழைக்காமல்,’Mummy’    என அழைப்பதில் இருந்து தான்.

பிரபலமான சமூக வலைதளமான முகநூல் கூட தமிழில் உள்ளது.

பல பழமையான தமிழ் நூல்களை கற்றால், வியக்கும் வரலாற்று உண்மைகள், அதிசயிக்கும் அறிவியல் புதுமைகள் என பல வெளிப்படும்.

எனவே அனைவரும்,

         “தமிழை கற்போம்,தழைத்து உயர்வோம்”
“தமிழ் மொழியை அழிவில் இருந்து காப்பாற்றுவோம்”

தமிழில் உரையாடுவோம்!!

 

எழுதியவர் : அருண் பாலாஜி, முதலாம் ஆண்டு ECE மாணவன்