ஒரு கிராமத்தானின் கதை

நட்சத்திரங்கள் இசை பாட, நிலவின் தாலாட்டில் உறங்கி, கதிரவனின் கைகளில் காலை எழுந்தவுடன், பசுமை கொஞ்சும் வயல்வெளியில் விளையாடி மகிழ்ந்து அரசு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த சாதாரண விவசாயி மகன் நான். பள்ளிக்குச் செல்லும் வழியெல்லாம் அரட்டைகளும், சேட்டைகளும் எங்களின் புன்னகைக்கு காரணமாக இருந்தன. அந்தப் புன்னகை என்னவோ என்னிடம் நிலைக்கவில்லை.

படிக்காத என் தாய் தந்தைக்கு என் படிப்பில் இருந்த அக்கறையால் “சிறந்த கல்விக்கூடம் என்ற சிறைக்கு” அனுப்பப்பட்டேன். காரணம், சமூகம் அதனை பெருமையாக எண்ணியது. என் கிராமத்துப் பள்ளிக்குச் செல்லும் போது செலவுக்கு இரண்டு ரூபாய் கொடுத்த போது இருந்த சந்தோசம் என்னவோ விடுதிக்குச் செல்லும் போது செலவுக்கு இரு நூறு ரூபாய் கொடுத்த போது இல்லை.

ஊரில் ஆடு மேய்த்த போது எல்லா ஆடுகளையும் நான் ஓரிடத்திற்கு விரட்டுவதைப் போல என்னையும் மதிப்பெண்களை நோக்கி விரட்டினர். அரசு பள்ளியில் அடி வாங்கி அனுபவக்கல்வி பெற்ற எனக்கு, அடியில்லாமல் வெற்றுப் புத்தகத்தை மனப்பாடம் செய்வதென்பது சற்று கடினமாக இருந்தது. தமிழ் வழி மாணவன் மாநிலத்தில் முதலிடம் பெற முடியாது என்பதாலோ என்னவோ எனக்கு அவ்வளவு சித்ரவதைகள் இல்லை.

இறுதியில் எல்லா ஆடுகளும் கறிக்கடைக்குச் செல்வதைப் போல நானும் மதிப்பெண் பெற்று கல்லூரிக்குச் சென்றேன்.உலகம் என்ன என்று தெரியாமல், புத்தகத்தை நகல் எடுக்கும் இயந்திரமாக, வெறும் மதிப்பெண்களுடன் மட்டுமே நான் கல்லூரிக்குள் நுழைந்தேன். பள்ளி விடுதியில் நகரத்து நண்பர்களிடம் விவசாயம் எப்படி செய்வோம்? கிராமம் எப்படி இருக்கும்? என விவரிக்கும் போது “கிராமத்தான்” என்பதில் கர்வம் கொண்டேன்.

ஆனால் “விவசாயி மகன்” என்பதில் எனக்கிருந்த பெருமை என்னவோ “விவசாயி” என்பதில் என் தந்தைக்கு இல்லை. காரணம் இந்தச் சமூகம். மாதம் பத்தாயிரம் வாங்குபனுக்கு இருக்கும் மரியாதை கூட மூன்று வேளை சோற்றுக்குக் காரணமானவனுக்கு இல்லை. “என்ன வேண்டுமானாலும் படி. என்ன வேலை வேண்டுமானாலும் செய். என்னைப் போல மட்டும் ஆகாதே” என்று என் தந்தை வாயிலிருந்து வந்த வார்த்தைகளுக்கு இதுதான் காரணமோ?.

 

விவசாயிகள் தற்கொலைகளை தடுத்தாலும், விவசாயிகள் விவசாயத்தை விட்டுச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது. நூறு விவசாயக் குடும்பங்கள் இருந்த என் கிராமத்தில் இப்போது இருப்பது என்னவோ இருபது, முப்பது குடும்பங்களே. எந்தப் பிரச்சனைகளையும் பேசி முடித்ததுக் கொள்ளும் மக்களின் மத்தியில் வாழ்ந்த நான், இப்போது முகத்தைப் பார்க்காமல் “TN wants Cauvery, TN hates Karnataka” என கத்திக்கொண்டு முகப்புத்தகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் மட்டுமே விவசாயத்திற்கு பிரச்சனை இல்லை. ஆனால் இப்போது அந்த தண்ணீரும் பிரச்சனையாக ஆகிவிட்டது.

பிரச்சனைகள் அனைத்தும் சமூகத்திடம் உள்ளன. எப்போது நாம் அதை உணர்கிறோமோ, அப்போது தான் விவசாயம் தளிரும்.

எழுதியவர், மதன் அண்ணாதுரை, சிறந்த பேச்சாளர் மற்றும் இரண்டாம் ஆண்டு ECE மாணவன்