நாகரிகப் பிச்சை

nagareegap pitchai

 

வீட்டைக் கட்டிப் பார், திருமணம் செய்து பார்” என்பார்கள்.  திருமணம் என்பது இருமனம் ஒருமனமாய் மாறும் ஆனந்தத் தருணம் தானே?  இதில் என்ன கஷ்டம் இருக்கிறது?  நம் வாழ்வில் திருமணம் என்பது முக்கியமான ஒன்று. யாராலும் உறவினர்கள் , நண்பர்கள் இல்லத் திருமணங்களில் கலந்து கொள்ளாமல் இருக்க முடியாது. அப்படித் தான் என் நண்பனின் சகோதரி திருமணத்திற்குச் சென்றேன். சென்னையில் கரகரப்பான இரைச்சலைக் கேட்ட காதிற்கு பேருந்தின் ஜன்னல் ஓர இருக்கையில் இதமான தென்றல் காற்று, காற்றிலே இதமான இளையராஜா பாடல், செவிக்கு மட்டும் அல்லாமல் கண்ணுக்கும் விருந்தாய் அமைந்த இயற்கை அழகை விவரிக்க வார்த்தைக்கே பஞ்சம் ஏற்படும்.
திருமண இல்லத்தை எளிதாக அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் பந்தல் அமைப்புகள் ,அலங்காரங்கள் , ஒலிபெருக்கிகள் சப்தத்தில் திருமண இல்லத்திற்குச் சென்றேன். வரவேற்கும் உறவினர்கள் அனிச்சம் மலரை நாள் முழுவதும் வாடாமல் பார்த்துக் கொள்ளும் வண்ணம் அவர்கள் வரவேற்ற விதத்தைப் பார்த்த பொழுது அருகில் தொங்கும் பூமாலைகளும் நம்மை புன்னகையுடன் வரவேற்பது போல் தோன்றும்.
மணப்பெண்ணின் தோழிகள் ஒருபுறம் கேலிகிண்டல்கள் செய்து விளையாட , உறவினர்கள் சூழ்ந்திருக்க , அங்கும் இங்கும் ஓடி விளையாடி திருமண இல்லத்தை அழகாக்கும் குழந்தைகளைப் பார்க்கும் போது சொர்க்கத்தை இரண்டு நாள் வாடகைக்கு எடுத்தது போன்று இருந்தது.இந்த சொர்க்கப் பூஞ்சோலையில் அனைவரும் சந்தோசத்தில் அமர்ந்திருக்க ஒருவர் மட்டும் சிறிது வருத்தம் கலந்த சந்தோசத்துடன் இருந்தால் அவர் வேறு யாராக இருக்க முடியும், மணமகளின் தந்தை தான்.
திருமணம் நல்ல முறையில் நடந்து உறவினர்கள், நண்பர்களின் வாழ்த்தால் மணமக்களின் மனமும், விருந்தால் வாழ்த்தியவர்கள் வயிறும் நிறைந்தது.
மணமகளை அழைத்துச் செல்லும் நேரம் . இதுவரை மணமகள் கண்டிராத புதுவிதமான பயம் அவள் மனதில் தோன்றியது. இவ்வளவு நாள் இளவரசியாக சுற்றி வந்த வீட்டில் , தம்பியுடன் போட்ட செல்ல சண்டைகள், சகோதரியுடன் பகிர்ந்துக் கொண்ட பள்ளி,கல்லூரி அனுபவங்கள், சமையல் கற்றுக் கொள்ள அழைத்தும் அதைப் பற்றி கண்டு கொள்ளாத போதும் புன்னகையுடன் அரவணைத்த அம்மாவையும் , அன்பு கலந்த அரவணைப்புடன் அறிவுரை தரும் பாட்டியையும்கண்ணீர் வரும் முன் துடைக்கும் அப்பாவையும் விட்டுப் பிரிகிறோம் என்ற வருத்தத்தில் கண்ணில் நீர் பெருக்கெடுத்தது. மகளை அனுப்ப வந்த தந்தைக்கு எதிர்பாராத விதமாக கால் இடறி செருப்பு அறுந்து விட்டது.
மணமகளை அழைத்துச் செல்ல அவள் தந்தை அளித்த கார் நெருங்கிய போது
    ” கட்டிய கணவனுடன் காரில் செல்ல மனமில்லை,
     கட்டிக் கொடுத்த தந்தை
     செருப்பின்றி காலில் நடந்து செல்வதால் என அவள் வடித்த கண்ணீர் எனக்கு உணர்த்தியது .வேறு வழியின்றி அனைவரின் ஆசைப்படி புதுவாழ்வு தொடங்க கணவனுடன் கண்ணீருடன் கை கோர்க்கிறாள்.
மணமகளின் கண்ணீருக்கு காரணம் என்ன? மணமகளின் தந்தை வருத்தம் கலந்த சந்தோசத்துடன் காணப்படக் காரணம் என்ன?
இல்லாதவர்கள் இரக்கத்துடன் கேட்டால் அது “பிச்சை”. இருப்பவர்கள் இறுமாப்புடன் கேட்டால் அது நாகரிகப் பிச்சை (வரதட்சணை). பெண்ணின் குணத்தைப் பார்க்காமல் அவள் கொண்டு வரும் பணத்தைப் பார்த்தால் அந்த பெண்ணிற்கு எப்படி உங்களின் மீது அன்பு வரும். முதியோர் இல்லங்கள் அதிகரித்து விட்டன, என் மருமகள் என்னை துரத்திவிட்டாள் என புலம்புபவர்களே வீட்டிற்கு வரும் பெண்ணை மகளாக நினைத்து அவள் கொண்டு வரும் பணத்தைப் பார்க்காமல் குணத்தைப் பார்த்திருந்தால் இது நடந்திருக்குமா?
சமுகத்தில் திருமணத்தின் போது மட்டும் அல்ல ,ஒரு பெண் குழந்தை பிறந்த செய்தி கேட்டு வருத்தம் கலந்த சந்தோசத்துடன் பெற்றோர்கள் இருக்க காரணம் குழந்தை பெண்ணாய் பிறந்ததால் அல்ல, அவளை எப்படி வளர்த்து மணமுடித்துக்  கொடுக்கப் போகிறோம் என்ற கவலையில் தான். அன்றிலிருந்து தன் வாழ்க்கையின் சந்தோசங்களை தியாகம் செய்யும் தந்தைகளும், சகோதரியின் திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைப்பதற்காக பிடித்த வேலை கிடைக்கும் வரை காத்திருக்காமல் கிடைத்த வேலைகளைச் செய்யும் சகோதரர்களின் தியாகத்தினால் தான் ஒரு நடுத்தர குடும்பத்தில் திருமணம் நடைபெறுகிறது.
தன் மகளிற்காக , தன்னுடன் பிறந்தவளின் சந்தோசமான எதிர்கால வாழ்விற்காக நம் நிகழ்காலத்தை இழக்கின்றோமே இதை விட வாழ்க்கையில் பெரிய இழப்பு என்ன இருக்கப் போகிறது. இன்னும் இரண்டு , மூன்று பெண் குழந்தைகள் உள்ள வீட்டின் நிலையைப் பற்றி சொல்லவா வேண்டும்?
இதில் வெட்கக் கேடான விஷயம் என்னவென்றால் படித்தவர்கள் பிச்சை எடுப்பது தான். இன்ஜினியர்கள் , டாக்டர்கள், அரசு அதிகாரிகள் என ஒவ்வொருவரும் தங்கள் தகுதிக்கு ஏற்றவாறு பிச்சை கேட்கிறார்கள்.
சிலர் வரதட்சணை வாங்கவில்லை என்றால் மணமகனுக்கு ஏதோ குறைபாடு என்கிறார்கள்.
மற்றவர்களுக்கு பிடித்த மாதிரி
     பளப்பளப்பாக வாழ்வதை விட
     நமக்கு பிடித்த மாதிரி
     கலகலப்பாக வாழ்ந்துவிட்டு போய்விடலாம் என்பேன் நான்.
100 ரூபாய் கொடுத்து ஃபீட்சா வாங்கி பெருமைக்காக உண்பதை விட 10 ரூபாய் கொடுத்து பிடித்த பண்ரொட்டி வாங்கி சந்தோசத்துடன் சாப்பிட்டு விட்டு போகலாம்.
தற்போது திருமணம் என்பது மணமகனை விலைக்கு வாங்கும் சந்தையாக மாறி வருகிறது.
நீங்கள் விரும்பும் மணமகன் வெள்ளைத் தோல் உடையவனா என்று பார்க்காதீர்கள் , தன் மகளுக்கு கடைசி வரை தொல்லை தராமல் இருப்பவனா என்று பாருங்கள்.
கருப்பானவனா என்று பார்க்காதீர்கள் , குடும்பத்திற்குப் பொறுப்பானவனா என்று பாருங்கள்.
படித்தவனா என்று பார்க்காதீர்கள், தன் மகளிற்குப் பிடித்தவனா என்று பாருங்கள்.
பணம் படைத்தவனா என்று பார்க்காதீர்கள், நல்ல குணம் படைத்தவனா என்று பாருங்கள்.
வரதட்சணை என்பது மணமகனின் வீட்டார் கேட்டுப் பெறுவது மட்டுமல்ல மணமகளின் வீட்டார் மணமகனின் தகுதி இவ்வாறு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதும் வரதட்சணை தான்.
நோமோபீயா” (without Mobile phone) என்னும் வியாதியில் பாதிக்கப்பட்டிருக்கும் நமக்கு மகளிர் தினத்தன்று ” பெண்களைத் தாயாக மதிக்கிறேன்” என்று status, dp, வைக்கத்தான் நேரம் உண்டே தவிர பெண்ணின் மீதான தாக்குதல்களை தட்டிக் கேட்க முடியாமலும் , அவர்களுக்கு நீதி கிடைக்காமல் புறக்கணிக்கப்படும் போது நம்மால் எதிர்த்துக் கேட்க தைரியம் இல்லாமலும் இருக்கிறோம், எனினும் நாம் நினைத்தால் வரதட்சணை என்பதை ஒழிக்க முடியும்.

பள்ளியில் “ஒன்று சேர்த்தல்” என்னும் போட்டியில் ஒரு மாணவனிடம் இந்திய வரைப்படத்தை பல பாகங்களாக கிழித்து இதை ஒன்று சேர்க்க வேண்டும் என்று கூறி ஐந்து நிமிடம் கொடுத்தார்கள் .
அந்த மாணவனோ இரண்டு நிமிடத்தில் முடித்து விட்டான். ஆசிரியர், எப்படி எளிதாக முடித்தாய்? எனக் கேட்ட போது இந்தியாவை ஒன்று சேர்ப்பது அரிதான ஒன்று  இந்திய வரைப்படத்தின் பின்னால் ஒரு மனிதனின் படம் இருந்தது. அந்தத் தனி மனிதனை ஒன்று சேர்த்தேன் இந்தியா ஒன்றாகி விட்டது என்றான் அவன்.
நானும் என் நண்பர்களும் நாகரிகப் பிச்சை எடுக்க மாட்டோம் என்று முடிவு எடுத்தது போன்று நீங்களும் முடிவு எடுப்பீர்கள் என எண்ணி ,
இது வரை இழந்தது போதும் இனியாவது வாழ்வோம்”
   “வாழ்வது ஒரு முறை 
   வாழ்த்தட்டும் தலைமுறை”
என உங்களின் மனமாற்றத்தை விரும்பும்
பாசமுடன் ” பாசித்”.